நேசம்


முன்பு தினமும் 
உனது நேசத்தைப் பெறுவதற்கான
வழிகளைப் பற்றியே
யோசித்துக் கொண்டிருந்தேன்


சிரிப்பால்
அழுகையால்
கோபத்தால் 
இரக்கத்தால்
பைத்தியகாரத்தனத்தால்
பிரியத்தை  பெறுவதற்காக 
தினமும் ஒரு நாடகத்தை
நடத்திக்கொண்டிருந்தேன்...!


ஆனால் எல்லாம் முடிவுக்கு வந்ததும்
நாடகங்கள் அற்ற
சொற்கள் இல்லாத 
ஒரு நேசத்தைக் கொடுக்க 
ஆரம்பித்தேன் !!வென்றாய் எனை

வென்றாய் எனை இறுதியாய் !!


அன்றில் இருந்து , உன்னை
படிக்கிறேன் விழித்ததும் ,
உன்னை படித்தே உறங்க
செல்கிறேன்....ஏன் விலக்கினேன்,
இன்று ஏன் இணைக்கிறேன்,
புரியவில்லை மனமும் மந்தியாய்
அலைகிறதே ,கிளைதேடி,
அழைத்தேன் நிரந்தரமாய்
அமர எண்ணி....காணவில்லை
உன்னை, நேற்று வரை
விரும்பி, இன்று வெறுக்கிறாயா ?
நட்பாய் நான் கை நீட்ட
எங்கே சென்றாய் ? 
விரும்பி அழைக்கிறேன்....


காலத்தால் மலர்ந்திடும் மலர்கள்
நம் காவிய படைப்பின் புது மலர்கள்...!!கவிதை நீ


கவிதைகளால் நீ செய்யும்
தவறுகளுக்கு,
எனக்கு நான் தரும்
தண்டனை, அதை
படிக்காமல்
இருப்பதுதான்...!

***************************************************

பதிவு எழுதலாம் என்று
எண்ணி அமர்ந்தாலும்
என் பேனா கவிதையே
எழுதுகிறது, சொன்னாலும்
கேட்கவில்லை மனதும்,
இந்த பேனாவும் ! நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்...
தாம்பத்தியம் பதிவை
தொடரவேண்டும் நான்.
அங்கே 'மனதோடு மட்டும்', வெறும்
மரத்தோடு மட்டும் நிற்கிறது...!!??


(இதையும் கவிதைன்னு நினைச்சி படிங்க, வேற என்ன சொல்ல...உங்க தலைஎழுத்து...!! )-- 

காதலை சொல்...

  

   நான் உனக்காக காத்திருப்பது போல
   யாருக்காகவோ காத்து இருக்கிறது படகு.
   யாரும் பயணிக்காத படகு
   நதியில் மூழ்கிவிடும்...
   நீ கவனிக்காத  என் காதல்
   என்னையே மூழ்கடித்து விடும்.
   உன் நதி மேனியில்
   எப்போது பயணிக்குமோ
   என் விரல் படகுகள்
   வா... வந்து என்னிடம் காதலை சொல்
   பயணிக்க தொடங்கி விடும்
   என் படகு......


படிச்சதில் பிடித்தது.....

ஏன் ?

  
     எங்கோ தூரத்தில் இருந்து
     உன் நினைவுகளால் ஏன்
     என்னை துரத்துகிறாய்?
     நான் நானாகவே இங்கு
     இருக்கும்போது உனக்குள் எப்படி?
     என்று கடன் பெற்றேன்,
     இன்று திருப்பித்தாவென கேட்க ?
     அழகான என் இதய கண்ணாடியில்
     நீ எறிந்த கல் பட்டு உடைந்து
     சிதறிய சில்லில் என் உருவம்
     காணாமல்  தேடுகிறேன்.
     தேடிக்கொண்டே இருக்கிறேன்.....


                                                        *************

அன்பே

            
              
               காதல் கவிதை தவிர
               வேறு எழுத தெரியாதா?
               என்கிறார் என்னவர்..!
               மனம் முழுதும் காதலாய் நீ
               வியாபித்திருக்கும் போது
                கவிதையிலும் காதல்தான்
                இருக்கும் என்றேன் திமிராக !


                சங்க  இலக்கியம் தேடி 
                எதுகை, மோனையில்
                எழுதுகிறேன் வெறுப்பில் , 
                சண்டையிடு
                என்னிடம் என்றேன்.
                அது எப்படி? சொல்லிதா
                என்றாய் குறும்புடன்..!  .


                 சட்டென கண்மூடிய நான்
                 மனதிற்குள் வணங்கினேன்
                 உன்னை எனக்களித்த உன்
                 அன்னையை.
                 பின் வார்த்தைகள் அற்ற
                 மௌனமாய் தொடர்ந்தன
                 நம் வாதங்கள்!!

பெண்மை ??கவிதையில்லை...?!


அன்று,  
மூணாறு  தேனிலவு சென்ற இடத்தில் கணவன் கொலை ,
தனது காதலனுடன் வாழவேண்டும் என்பதற்காக
ஒன்றும்  அறியாத கணவனை கொன்றாள்....


நேற்று, 
சட்டம் படித்தவள் , காதலன் கரம் பிடிப்பதற்காக,
திருமண நாளை எதிர்பார்த்து ஆசையுடன் காத்திருந்த
அப்பாவியை, கண் முன்னால் கொன்று ரசித்தாள்....


இன்றோ,  
தன்னை ஏமாற்றிய ஆண் மகனை பழிவாங்க
அவனது இளந்தளிர் வாரிசை இரக்கமின்றி
கழுத்தை நெரித்து கொன்று பழி (பலி) வாங்கினாள்  ...


என்னவாயிற்று என் இனத்திற்கு ?
மென்மை, தாய்மை, இனிமை, அன்பு, பாசம், கருணை, 
இரக்கம் இவற்றின் மொத்த உருவம் தானே பெண்...! 
இந்த பெண்மையில்  மண் விழுந்தது எப்போது ??


பெண் தான் நினைத்தது நடக்க வேண்டும் 
என்ற வீம்பிற்காக 'எந்த நிலைக்கும் இறங்குவாள்'
அதற்கு உதாரணம் தானா இவை மூன்றும்?!
இருக்கட்டும்,  இதுவே 'கடைசி உதாரணமாக' என்ற 
நப்பாசையில் புலம்பும் அதே இனத்தில் 'ஒன்று'!


***************************
.   

நீ அறிவாயா?
என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி ?
என்ன தெரியவேண்டும்? சொல்கிறேன் கேள்?


என்னை அழுத்தும் பெருஞ்சுமை எதுவென்று அறிவாயா?
அதன் விலை என்னவாக இருக்கும் நீ அறிவாயா?


செங்கலுடன், கனவையும் சேர்த்து நான் கட்டிய
                                                       என் வீட்டை அறிவாயா?


மொட்டுகளை எண்ணி, தளிர் இலைகளை தொட்டு
                           வளர்த்த பூந்தோட்டம் அறிவாயா?


மரங்களில் என் பெயரை எழுதி , மரத்துடன் என் பெயரும்
                           வளருவதை ரசித்ததை அறிவாயா?


காலணியுடன் வீட்டினுள் நடந்த நாள் மறந்து,
                           மண் தரை அமர்ந்து களித்ததை  அறிவாயா?


மரத்தினடி அமைத்த  கூண்டில் காதல் பறவைகளின்
                           முத்த  சத்தம் கேட்டு வியந்ததை அறிவாயா?


என் இறுதி தூக்கம் அங்கேயே இருக்க எண்ணி, ஆறடி
                           இடம் ஒதுக்கி மரங்களை நட்டதை அறிவாயா?


எனக்காக உருவாக்கிய  அந்த சொர்க்கபுரியை  விரைவில்
                           இழக்க போகிறேனே அதாவது அறிவாயா?


நம்பிக்கை போனதால் என்னை நானே இருமுறை
                           கொலை செய்ய முயன்றதை அறிவாயா?


அந்த எண்ணத்தில் இருந்து என்னை மீட்டெடுத்தது
                           எதுவென்று நீ அறிவாயா?


உயிருடன் இருந்தாகவேண்டுமே என்ற கட்டாயத்திற்காக
                           உணவருந்துகிறேன் அதை அறிவாயா?


என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி?
                           எல்லாமே கானல் நீராகி போனபின்


அன்பாம்......, நட்பாம்......., கவிதையாம்.......!!வீட்டு தோட்டம்


சிலர்  என்னிடம் வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்கள்.  மாடி வீடு  அல்லது அப்பார்மென்ட் மாதிரியான வீடுகளில்,   இருக்கும் கொஞ்ச  இடத்திலும் நம் சமையல் அறையில்  இருப்பதை வைத்தே, கண்ணுக்கும் மனதுக்கும்  குளிர்ச்சியாக செடிகளை வளர வைக்கமுடியும்.  கொஞ்சம் பொறுமையும், அதிகமான விருப்பமும் இருந்தாலே போதும் வீட்டை சுற்றி பசுமை சூழ செய்து விடலாம்.

சில விவரங்கள் நான் ஏற்கனவே கூறியதுதான், இருப்பினும் இங்கே மறுபடியும் விளக்குவது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வீட்டில் மண்தரையில் செடிகள் போட இடம் இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். மண் தொட்டி, சிமென்ட் தொட்டி இல்லை என்றாலும் பரவாயில்லை, நல்ல நிலையில் உள்ள பிளாஸ்டிக் சாக்கே போதுமானது.  தொட்டிகளை வாங்கியதும் அதில் தண்ணீர் தெளித்து ஓர் நாள் முழுவதும் ஊற விடுங்கள். சாக்கை வெளி பக்கமாக நன்கு சுருட்டி அல்லது மடித்து பாதி சாக் அளவு  ரெடி பண்ணி வைத்து கொள்ளுங்கள்.

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைப்பது இல்லை. ஆகவே நீங்கள் எடுக்ககூடிய மண்ணையும் வளபடுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டு விட்டு அதனுடன் காய்ந்த சாணம் (இல்லை என்றாலும் பரவாயில்லை ) கிடைத்தால் தூள் செய்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.

வேப்பமரம் வீட்டின் அருகில் இருந்தால் அதன் இலைகளை (காய்ந்த அல்லது பச்சை) முடிந்தவரை சேகரித்து தொட்டி , சாக்கில் பாதி அளவு போடுங்கள் அதன்பின் மண்ணை
போட்டு நிரப்புங்கள்.  இலை அப்படியே மக்கி உரமாகி விடும் மற்ற இலைகளும் போடலாம் ஆனால் வேப்பிலை மிக மிக சிறந்தது.  இதன் கொட்டைகளை சேகரித்து உடைத்து தூளாக்கி  போடலாம், வேறு வேதி உரங்கள் ஏதும் தேவை இல்லை.  செடிகளும் நன்கு செழித்து வளரும்.

இப்போது நமக்கு மிகவும் அவசியமான செடிகளை பற்றி மட்டும் பாப்போம். தக்காளி, கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும் தனியாக தேடி போக வேண்டாம் என்பது ஒரு வசதி.

புதினா, கீரை  ---------- நாம் உபயோகித்தது போல் மீதம் இருக்கும் அந்த தண்டுகளை மட்டும் சேகரித்து நல்லதாக பார்த்து எடுத்து அதை அப்படியே மண்ணில் ஊன்றி வைக்க வேண்டும் .கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும் , பின் தண்ணீர் தெளித்து விடுங்கள். பொன்னாங்கண்ணி கீரையையும் இந்த முறை படி வளர்க்கலாம்.

கொத்தமல்லி--  வாங்கும் மல்லி வேருடன் இருந்தால் மீண்டும் தளிர்க்க  வைக்க முடியும் , கட் பண்ணி எடுத்தது போக இருக்கும் வேர் பகுதியை அப்படியே மண்ணில் புதைத்து வைத்து விடுங்கள். பின் தண்ணீர்  விடுங்கள். தண்டு கீரையை  வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் மறுபடி வளர்க்க முடியும்.

தக்காளி,கத்தரி,பாகை --------- கடையில் காய்கறி வாங்கும்  போதே இரண்டு அல்லது மூன்றை நன்கு  பழுத்ததாக வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். பின் அதன் தோலை எடுத்து விட்டு விதைகளை மட்டும் ஒரு பேப்பரில் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.   சாணி கிடைத்தால் அதை தண்ணீரில் கரைத்து அதில் விதைகளை ஒரு நாள் ஊற வைத்தால் நல்லது, இல்லைஎன்றாலும் பரவாயில்லை.

பிறகு தக்காளி, கத்தரி விதைகளை கொஞ்சம் எடுத்து அப்படியே தொட்டியில் விதைத்து விடுங்கள்.  கொஞ்சம் வளர்ந்த பின்னர் தனியாக கன்றுகளை எடுத்து சாக்கு, தொட்டியில் நட்டு  விடுங்கள், தண்ணீர் விடுங்கள் . அவ்வளவுதான்.

பச்சை மிளகாய்க்கு, மிளகாய் வற்றலில் இருந்து விதைகளை எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது மழை காலமாக இருப்பதால் செடிகளை நட இதுவே உகந்த  நேரம். வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

அக்கறையும், கவனமும் இருந்தால் வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும்.

பிரெஷாக உருளைக்கிழங்கு நம் வீட்டிலா...?  எப்படி.....?   பதிலும்,  விளக்கமும்  அடுத்த பதிவில்....!!

இன்னும் வளரும்.........     

புதிது ! புதிது !


எதற்கும் அசைந்து
கொடுக்காத நான், 
உன்னை பார்த்த நொடியில் 
சிலையாகி போனது புதிது !


என் விழிகள்
உன் பிம்பத்தை சுமப்பது புதிது !


சுதந்திர எண்ணம் 
உடைய நான் 
உனக்கு அடிமையானது புதிது !


காதலோடும், கனவுகளோடும்
நான் உன்னை தினமும்
எதிர்பார்த்து காத்திருப்பது
புதிது ! புதிது ! புதிது ! 

பிடித்த கவிதைநான் முன்பு எழுதிய கவிதைகளும், எனக்கு பிடித்த கவிதைகளும் இனி உங்கள் பார்வைக்காக...  


"  கவிதைகளை எழுத 
   வைத்த உன் கண்கள்...
   மனதை குழம்ப
   வைத்த உன் பேச்சுகள்...
   என்னை மயக்கிய
   உன் சிரிப்பு...
   உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால் 
   காதலின் சுவை என்னவென்று 
   அறியாமலே, 
   என் ஆயுள் முடிந்திருக்கும்...! "


"  உன் பெயரைத் தவிர
   மற்ற எழுத்துகள், 
   என் பேனாவால் 
   பெரும்பாலும்
   தவறாகவே 
   எழுதபடுகின்றன...!! "


"  உன்னை விரும்புகிறேனோ 
   இல்லையோ
   மறக்க விரும்பவில்லை...!! "
கவிதைகள் தொடரும்...........காதல்... காதல் ...

                
                    மீன்களுக்கு 
                    வியர்த்ததுபோல்
                    ஈரமான கண்களோடு 
                    நீ.....!
                    ஒரு நாள்
                    கலங்கி கண்ணீர் விட்டபோது,
                    நான் உன்னிடம் 
                    கேட்கவில்லை!
                    என்னிடம் தான் கேட்டேன்...!?
                    கடவுள் செய்த
                    வெட்டி வேலைகளில்
                    ஒன்றுதானா...

                    காதலை படைத்ததும்....!

                                                                                                                      

வாசலுக்கு வரவேற்கிறேன்

இந்த வாசலுக்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.   நண்பர்களும் , தோழியரும் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து எழுத சொன்னதின் பேரிலும் கவிதைகள் எழுத சொன்னதின் பேரிலும் இந்த தளத்திலும் தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்.  


எனது பிற விருப்பங்களான சமையல், கலர் மீன் வளர்ப்பது, லவ் பேர்ட்ஸ் வளர்ப்பது, நாட்டு கோழி தவிர பிற இன கோழிகள் (வான் கோழி, கினி கோழிகள்) வளர்ப்பது, வீட்டிலேயே சாப்பிடும் மீன் இனங்கள் வளர்ப்பது, நாய் வளர்ப்பது எப்படி என்பதை பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன்.


உங்களின் ஆதரவை பொறுத்தே என் பதிவுகள்  வளரும் என்பதையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.  
                                                                     *********
மைக்ரோவேவ் சமையல்  


இஞ்சி தொக்கு


தேவையான பொருட்கள்:

 இஞ்சி------------------  : 5 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் :  5 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய்----  :  1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் ------------  :  1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கி வறுத்தது)
கடுகு ------------------  :  1 டேபிள் ஸ்பூன் 
வத்தல் ---------------  :   2
புளி தண்ணீர் -------  :   ஒரு கப்
தனியா தூள் -------   :   ஒரு டீஸ்பூன் 
சீரக தூள் -------------  :   கால் டீஸ்பூன் 
வெந்தயம் -----------  :   அரை டீஸ்பூன் 
கருவேப்பில்லை --  :   ஒரு கொத்து
உப்பு --------------------  :   தேவையான அளவு 
                                                                 **************
செய்முறை :

மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிள்ளிய வத்தல், தனியா,  சீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை (2 or 3 minutes ) வைத்து  எடுத்து அதனுடன் மஞ்சள்  தூள், தண்ணீர்  சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.

பின்னர் மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் , வெந்தயம் , கருவேப்பில்லை மட்டும் போட்டு இரு நிமிடம் கழித்து எடுக்கவும் பின் அதில் உப்பு, இஞ்சி, வெங்காயம்,  அரைத்த மசாலாவையும் போட்டு இரண்டு அல்லது மூணு நிமிடம் வைத்து எடுக்கவும்.  எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது சிறிது தண்ணீர் விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.  பிறகு புளி தண்ணீர், உப்பு, தேங்காயை  போட்டு கெட்டியாகும் வரை 5 அல்லது 7 நிமிடம் கழித்து  எடுக்கவும்.

இந்த முறையை மைக்ரோவேவ் இல்லாதவர்கள் சாதாரணமாகவும்  செய்யலாம்.
விருப்பத்தை பொறுத்து இந்த அளவுகளை கூட்டி கொள்ளலாம்.  ஒரு வாரம் வரை கூட  கெட்டு போகாது.  இஞ்சி ஜீரணத்துக்கு நல்லது என்பதால் இதை செய்து வைத்து கொண்டோம் என்றால் தினமும் உணவில்  கொஞ்சமாக சேர்த்து கொள்ளலாம்.

                                                           ******************

டிப்ஸ்

ஹோட்டல் சாம்பார் போல் மனமும் ருசியும் நம் வீட்டு சாம்பாரும் இருந்தால் நல்லா இருக்குமே இன்று நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன்படும்.  

ஒரு துண்டு தேங்காயை நன்கு துருவி அதனுடன், அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு அதில்  இதை நன்கு வறுத்து மிக்ஸ்யில் அரைத்து 
கொள்ளவும்.  சாம்பார் செய்து முடித்து இறக்க போகும் முன் இந்த அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.  இதோ  ஹோட்டல் சாம்பார் ரெடி...
                                                                 ***************


வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க..........!