வண்ணத்துப்பூச்சி !!

  தேவையின்றி சினம் கொண்டு
  வலிய பேசினாலும்  கடனே
  என்று நலம் விசாரித்து 
  முகம் பார்க்க மறுத்து 
  நிலம் பார்த்தும்,
  அழைத்த  குரல் கேளாதவனாய் 
  வான் பார்த்து, வெள்ளி எண்ணி
  நேரம் சென்றதை நாசுக்காய்
  உணர்த்தி, விடை பெறாமல்
  விடை கொடுத்து அகன்றாய் !!
  தாமதமாய் உணர்ந்தேன்,
  எல்லாம் புரிந்து போனது....
  மனம் கூட மலர்விட்டு 
  மலர் தாவும் 
  ஒரு வண்ணத்துப்பூச்சி !!









காற்றைப் போல நீ !


           பக்கமாய் இருப்பவர்களை 
           விட்டுவிட்டு தூரமாய்
           இருக்கும் உன்னைமட்டுமே
           நினைவால்  தொடும் நான்..!
           லேசாய் தொட்டுச் சென்றுவிடும் 
           காற்றைப் போல  நீ....!
           இடைவிடாது என் காதில்
           ஒலிக்கிறது உன் குரல்
            நீ பேசாத போதும்..!
            உன்னை பார்த்து 
            கொண்டிருக்கிறேன், அங்கே 
            நீ இல்லாத போதும்...!
   
            என்னை மட்டுமே நீ தொடர 
            வேண்டும் என்றும் , எங்கும், 
            எப்போதும்.....உன்னால் இயலாது
            என்று தெரிந்தும்,  
            உத்தரவிடுகிறேன் அன்பாய் !!?
   
            என்னை தவிர 
            வேறு யாரிடமும் பேசாதே !
            உன் இதழ்களில் 
            நனைந்து வருவதால் 
            வார்த்தைகள் எல்லாம் 
            முத்தங்கள் ஆகிவிடுகின்றன !!

  






  



நெஞ்சே....!

  
 முடிவில்லா 
 நீண்ட தூர துரத்தல்கள் !!
 பகலில் நினைவுகளால் 
 துரத்துகிறாய்.....அதில்
 மூச்சு வாங்கியே இரவு உறக்கம்
 தொலைக்கிறேன் 
 விடிவதற்கு சற்று முன்னே 
 உறங்கச் சென்றும் 
 கனவிலும் வந்து துரத்துகிறாய் 
 உறக்கம் தொலைத்து,
 உணவு என்பதை மறந்து
 எடை குறைந்து
 என்னை வேறாய் 
 வீட்டு கண்ணாடி பிரதிபலிக்க
 நெஞ்சே நீயும் நோயுடையாய் !
 என்னையும் நோய் செய்கிறாய் !
 இந்த நிலை ஏன் எனக்கு ?
 என்ன வேண்டும் உனக்கு ?!



மௌனமாய்...!

    
    தேடலின் விடை மற்றொரு     
  முடிவில்லா தேடல்....!! 
  தண்ணீர் பிடிக்க சென்றுவிட்டு 
  வெறும் குடத்துடன் திரும்பி வந்த 
  மனநிலை..!! 
  விளக்கம் பெற்றபின்னும்,
  அடம் பிடிக்கும் குழந்தை மனம்!!
  விளங்க முடியா கவிதையாய் நீ !!
  அனைத்தும் எனதாய் எண்ணி 
  போராடும் மனதை கட்டுபடுத்த 
  அறியா பேதையாய்...?!
  கட்டுபட மறுக்கும் ஆணவம்,
  வென்றே தீருவேன் என்ற 
  பிடிவாதம்....!!
  பக்குவம், என்னிடமும் வரும்வரை
  சற்றே விலகி நிற்கிறேன்,  உன் 
  அனுமதியுடன் மௌனமாய்...!!



விழியில்...!

        
        ஒலியின்றி வரும் வார்த்தைகள் 
        எதையும் உணர்த்தவில்லை ..?
        மறுபடி மறுபடி கேட்கிறேன் 
        விளங்க மறுக்கிறதே....! 
        ஏன் தொலைய வேண்டும் ?? 
        தொலைந்த பின் வந்ததா
        இல்லை வந்ததால் 
        தொலைந்ததா....?
        திரை அணிந்த விழியில் 
        தெரியவில்லை....
        தேடல் என்னவென்று....?
        அது  தெரிந்த பின்னே, 
        மனத்திரை திறக்கும் என்பதை 
        அறியா சிறு பிள்ளை !!







நீயின்றி மற்றொரு நாள்


      வார்த்தைகள் அபார கடலாய்
   விரிந்து என்னை உள்வாங்கியதென்ன...?
   மறுபடி எழ முடியாமல் அப்படியே
   அமிழ்ந்து போன மாயமென்ன..?!


   அந்த நிமிடத்தில் 
   உனது 'நான்' என்ற ஆணவதொனியில்
   எனது  'நான்' 
   மெதுவாய் கரைந்ததென்ன...?!


   இந்த ஆனந்தம்....
   சிரித்து மகிழ்கிற பரவசம் அல்ல,
   அழுது கரைகிற
   ஆனந்தம் என்றே புரிந்ததென்ன...?!


   எரிமலையின் வெப்பமும்,
   பனி மலையின் குளிர்ச்சியையும்
   ஒரு  சேர
   அனுபவிக்கும் இன்பமென்ன...?!


   கோபம், கர்வம் மறந்து மனதை சாந்தமும்,
   அமைதியும் கைகொண்ட உணர்வென்ன...?!
   இதே நிலை உனதும் என்றால்
   ஒன்றும்  சொல்லாமல் மறைந்ததென்ன...?!


   என்ன....! என்ன....! என்ன ....!


  

சுதந்திரம் கூண்டுக்குள்....!!?

    
    
        பல இன்னல் பட்டு அல்லல் பட்டு
       துக்க பட்டு. துயரப்பட்டு,
       ரோச பட்டு, கோபப்பட்டு,
       அடிபட்டு, வதைபட்டு,
       மிதி பட்டு, ரத்த கறைபட்டு,
       இறுதியாய் சிறை பட்டு
       ஊன பட்டு, உயிர் விட்டு 
       இரவில் வாங்கிய
       விடுதலையை, பகலில்
       கொண்டாடகூட வகையற்று
       அச்சப்பட்டு செங்கோட்டையில்
       பலத்த பாதுகாப்பின் நடுவில் 
       கொடி ஏற்றப்பட்டு,
       உரையாற்றுகிறார் பிரதமர்....
       கண்ணாடி கூண்டுக்குள் சிறைபட்டு !!
       அந்த சிறை மீண்டு உரையாற்ற,
       வேண்டும் உண்மையான சுதந்திரம் !
       எப்படி பெறுவது ? என்று பெறுவது ?
       யாரிடம் இருந்து பெறுவது ??
       விடை தெரிந்தால் சொல்லுங்களேன்
       என் உடன்பிறவா சொந்தங்களே.....!!



இதுவும் ஒருவகையில் காதல் கவிதைதான்...என் தேசத்தின் மீதான காதல்.... இன்று சுதந்திர தினம்.......! ஆனால் வாழ்த்து சொல்லகூடிய அளவில் மன மகிழ்ச்சி இல்லையே....என்று பெறுவோம் முழு சுதந்திரம்...,  நம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளிடம் இருந்து.......??!!



பறிபோகாதவரை....


     இன்றும் நான் உன்னை தேடுகிறேன் !
     நீ இங்கே  இல்லை
     நாம் பகிர்ந்து கொண்ட காதலும் 
     இனிய முத்தங்கள் மட்டும் இருக்கின்றன....!

      
     உனது தோளில் சாய்ந்து 
     கனவு காணவும்
     உன் இதழை சொந்தமாக்கவும்
     உன் குரலில் மயங்கி கிடக்கவும்
     உன்னை அணைத்து கொண்டு 
     விவாதம் செய்யவும்,
     எல்லாவற்றிருக்கும் மேலாக
     உன்னை முழுமையாக
     என்னுடையவளாக்கவும்  
     ஆசைக் கொண்டு முயன்றாலும் 
     முடியாது போய் விட்டது...!..
     இருப்பினும் அன்பை  கொடுக்கவும்
     அன்பை எடுக்கவும்
     எனக்கிருக்கும் உரிமை
     பறிபோகாதவரை.


     நாம் காதல் செய்வோம் .......!!


உன்னில் நான் !

   
      
      செம்மண் சேர்ந்த மழைநீர்,
      அதன் தன்மையை பெறுவதை 
      போல....
     " உன்னில் விழுந்த நான் "  

**********************************************************************


   ஒரு தரம் புல்லாங்குழல் 
   என்னை மீட்டுத் தந்தது !


   ஒரு தரம் காதல் 
   என்னை மீட்டுத் தந்தது !


   ஒரு வண்ணத்துப் பூச்சியும்
   என்னை மீட்டுத் தந்தது !


   நான்தான் அடிக்கடி 
   தொலைந்து விடுகிறேன்...!!

***************************************************
படித்ததில் பிடித்தது 





செல்லமாய்...

 
   
   ஒரு முத்தத்தை 
   ஒரு உடலில் 
   ஒரு மனிதன்
   எங்கெல்லாம்
   ஒளித்து வைப்பான்.....?!
   அதற்கு
   எவ்வளவு காலம் தான் 
   காவல் இருப்பான்...?!
   தீர்வு கேட்டேன் உன்னிடம்,
   
   'சொர்க்கத்தில் திருடிய முத்தத்தை,
    சொர்க்கத்திலேயே ஒப்படைத்து விடு '


    என்றாய்...!!



தேவதை போல.....!!

   மனம் லேசாய் மிதக்கிறது....
   சூழ்ந்த காற்றில் சுகந்த மணம்
   கண் மூடி முகர்ந்த உடலும் கனமின்றி 
   காற்றாய் மிதக்க...என்னே சுகம்!


   ஒரு கையால் மறுகையை   
   கிள்ளி பார்த்தும், வலி 
   மூளையை சென்றடையவில்லை ?!
   வலி உணரா இன்ப பரவசம்..!!
   மெதுவாய் என்னை சுற்றி,
   விழி திறந்து நோக்க...
   என்னை பற்றியே பலரும்,   
   ஒரு குறையும் இன்றி நிறையே 
   பேசுகின்றனர் ...?!   


   மேளத்துக்கு,   
   சிலர் தாளம் மாறி நடனமாட, 
   ஒலியில் இதய துடிப்பே 
   என் காதில் விழவில்லை..!!  
   மாலைகளும் பூக்களும் என்னை 
   இன்னும் அழகாய் காட்டுகிறது....!!
   தேவதை போல.....!!


   சொல்லவொன்னா மகிழ்ச்சியில்,
   உற்சாக துள்ளலாய் மெதுவாய், 
   சற்றே 
   கீழே பார்க்க,  துணுக்குற்றேன் !!
   மற்றவர்கள்  இரண்டு காலில் 
   நடக்க, 
   நானோ எட்டு கால்களில்...!!??     

   உயிருடன் அவர்கள்..... உயிரற்று  நான்.... !!



நிழலாய் நீ...



யாரையும் மனம் நோக 
பேசியறியாத எனக்கு, மறைவாக
நீ  நடத்தும் யுத்தத்தை 
எதிர்கொள்ள எவ்வாறு இயலும்?


உன் கோபம் முன் என் கூக்குரல்
எடுபடாமலே போய்விட்டது...
'கடைசிவரை மறவேன்'  
என்ற வாக்குறுதி இன்று 
காணாமல் ஓடியது எங்கனம்?


நான் எங்கே, யாரிடம் பேசினாலும்
அங்கே நிழலாய் நீ தெரிவதை
எப்படி புரிய வைப்பேன்..?!
சக்தி அற்று, என் சுயம் 
தேடி கொண்டே இருக்கிறேன்....


நீயே நான் என்றே, நான் எண்ண
நீ உன்னில் இருந்து என்னை 
பிரித்தது ஏன்....இந்த பிரிவு
உனக்கு இன்பம் என்றால் 
துன்பமும் வரமே எனக்கு...

வார்த்தையால்  என் இதயம் 
கிழிக்காதே, உனக்கு வலிக்கும் 
என்றே அஞ்சுகிறேன்...


உன்னிடமே....!!

  
    பெருமூச்சுடன் என் நெஞ்சம்....!
    உன்னை பிரிந்து வந்த பின்னும்,
    வராமல் உன்னிடமே....!
    நீயோ எதையும்
   அறிந்து கொள்ளாதவனாய் 
   பணியே கதி என்று...!?
   நான் உன்னையே நினைத்து
   ஒன்றும் இல்லாமல் போய்விடுவேன்
   என்றே அஞ்சுகிறேன் நிதமும்..?!
   என் அச்சம் தவிர்க்க நீ
   முயலாதது ஏனோ...?
   என் பொறுமை என்னை
   புறம் தள்ளுகிறதே...,
   மனதில் கொதிக்கும் வெப்பம்
   விரைவில் எரிமலையாய்...!
   அதில் சாம்பலாய் போகும் முன்னே
   கோபம் தணிக்க ஒரு
   பார்வையாவது வீசி விட்டு செல்.


*****************************************************
   



நீயாகிய நான் !!





அவனில்லாமல் நான் இல்லை,


நம்பிக்கை.....!


நானில்லாமல் அவனில்லை,


பெரிய நம்பிக்கை.....!


நான் சொல்கிறேன்,


அதையும் தாண்டி 


நானில்லாமல், 


எப்பிறவியிலும் அவனில்லை...!!


இதுவே நீயாகிய நான்...!!!


*****************************************************


"உன் மௌனங்கள்  எனக்காகவும்
என் மௌனங்கள்  உனக்காகவும்
காத்து இருக்கின்றன....
.............
.............
...........
காதலுடன்......!!"




*******************************************

தொடரும் குரல்...





சிறு வயதினலாய் பொம்மை  வைத்து  
விளையாட விரும்பினேன்....
உடனே நிறைவேறியது...ஆசை தீரும்  மட்டும் 
படிக்க விரும்பினேன்....
பல பட்டங்கள் என் பெயருக்கு பின்னே.
அன்பான, அருமையான, கம்பீரமான,
துணை வேண்டும் என்றேன்,
தேடி கண்டு, நிறைவேற்றினர் பெற்றோர்!


இருவரும் இணைந்தோம் மணவாழ்வில், 
ஒன்றாய் பறந்தோம், பறவைகளாய் ....
ஆடி களித்தோம், மற்றவர் பொறாமைபட 
கடவுள் என்னை மட்டும் அதிகமாய் 
ஆசிர்வதித்ததாய், ஆனந்த கூத்தாடினேன்....
நாட்கள்  நகர்ந்து மாதங்களாயின...!
மாதங்கள், வருடங்களாயின....!


என்னிடம் எதையோ தேடின
என் உறவினர்களின் விழிகள்...
தாமதமாகத்தான் உணர்ந்தேன் ,
நான் நானாகவே இருக்கிறேன் என்று...!!
என் கைகள் அனிச்சையாக என் 
வயிற்றை தடவின ஏன் இல்லை என்று...??
என்னை ஆச்சரியத்துடம் அன்று நோக்கிய 
உறவினர்களின் விழிகளில் இன்று 
ஏளன பார்வை......


அதை தவிர்க்க வீட்டுக்குள் சிறை 
வைத்தேன் என்னை,  துணையின் சமாதானம் 
காதில் விழுவதாய் இல்லை 
இப்போதெல்லாம்.... முழுதாய்  என்னை 
கடவுள் ஆசிர்வதிக்க தவறியது ஏன்?
பெற்றோர் வைத்த பெயர், மறைந்து 
வேறு  ஒரு பெயரில் அழைக்கின்றனர்..!


பிற பெண்கள் சாதாரணமாய் 
எதிர்கொள்வதை, நான் ஆவலாய் 
எதிர்பார்கிறேன்...,  ஒவ்வொரு மாதமும்.... 
எதிர்பார்த்து ஏமாறுகிறேன்....
ஏமாற்றி கொண்டே இருக்கிறது 
காலமும்.... 


கொஞ்ச நாளாய் தொடர்ந்து 
ஒரு குரல்....! 
என் காதில் ஒலித்துக்கொண்டே 
இருக்கிறது......!


"மலடியே மகிழ்ந்து பாடு,  நீ பல பிள்ளைகளின் தாய்....!!"