போதிமரம்.....!!


சரித்திரத்தை படிக்காமல் 
சரித்திரமாகி போனார்கள்....! 
மனிதம் ஏலம் போகும் ஊரில்
மனிதனாய் வாழ துடித்த 
பேராசை....!!
மரணம் பார்த்து மரத்துப்போன
விழிகளில் வழியும் கனவையும்,
கண்ணீரையும் துடைக்க 
வலுவற்று  .....வாய் இருந்தும் 
ஊமைகளாய்......!?
குண்டு சத்தம் பழகிய 
காதுகளுக்கு 'அம்மா' என்று 
அழைக்கும் குரல் கூட 
அதிர்வாய்.....!?

முகமூடி அணிந்த உலகில்
எம் மக்கள் மட்டும் நிர்வாணமாய்....!
கண்ணீரும், கோபமுமே நிரந்தரமாகி 
அதுவும் இன்று
வர மறுக்கிறதே.......??! 
யுத்தத்தின்  மிச்சங்களாய், 
உயிரை மட்டும் தாங்கி
அகதி என்ற பெயரில் 
எந்த விதி செய்த சதி......??!
துப்பாக்கி ஏந்தியவனை மட்டும் 
யுத்தம் ப(ழி)லி வாங்குவதில்லை,
அப்பாவிகளையும்......??! 

போலி பிம்பங்கள், தனி மனித இன்ப 
துன்பங்கள், சுயநலம், அரசியல், 
சினிமா என்று சுற்றிச் சுழலும் 
உலகத்தில்...  
எங்கள் இருப்பிடம் நிரந்தர  
சாத்தியமா.....?? 
கேள்விகளிலேயே கழியும் 
இரவுகள்...... !!?

மூன்று வேளை உணவு, இருப்பிடம், குடும்பம் என்று எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு குறை என்பது போல் சலிப்பாய் வாழ்வை நகர்த்துகிறோம்  நாம்...... ஒரு முறை நமக்கு அருகில் நாடோடிகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் அகதிகளாய்  நம் ஊரின் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருக்கும்  நம் ரத்த உறவுகளுடன் சென்று பேசி அவர்களின் துயரம் தாங்கிய கண்ணீர் கதைகளை கேட்டு அறியவேண்டும்.......

"போதிமரம் வேண்டாம் அகதி முகாம் போதும் ஞானம் பெற......!!"


  

சரணடைகிறேன் !!




    சொர்க்கமும் நரகமும் 
    ஒன்றாய்  கண் முன்
    தெரிகிறது 
     உன்னால்...!
    
    உன் புன்னகை உண்டாக்கிய 
    பூகம்ப
    இடிபாடுகளில்  தேடுகிறேன்
    என் இதயம்.....!!

    மாறி மாறி வார்த்தை அம்புகள்
   எய்தும்  சிறிதும்
   உரைக்கவில்லை....
   எறிந்தது  நீ என்பதால்...?!

   பிடித்த  புது மழையில் 
   நனையும் முன் 
   குளித்துவிட்டேன்.... உன்
   வார்த்தை நெருப்பில் !

   தாய் அடித்தும் 
   அவள் மடி தேடும் 
   குழந்தையாய்
   சரணடைகிறேன் உன்னிடம் !!



என் பெயர் காதல்....!!



    என்னை புரிந்து கொண்டதாய் 
    நீயும்....உன்னை புரிந்து கொண்டதாய்
    நானும் பொய் சொல்லி 
    கொண்டு  இருந்திருக்கிறோம்  
    இதுவரை..... !!


    ஓயாமல் பேசித்தீர்த்த பொழுதுகள் 
    கொஞ்சி கழித்த தருணங்கள் 
    முத்தத்தில் திளைத்த மோக நிமிடங்கள்
    நாள் தவறாமல் போட்ட சண்டைகள்
    கூடலில் முடியாது போன ஊடல்கள் 


    மெய்  மறந்த ஒரு நிலையில்,
    என்னுள் நீயும்.... 
    உன்னுள் நானுமாய்.... 
    கரைந்த தருணத்திற்கு,
    பின் வந்த காலை நேர மயக்கம்
    மசக்கைக்கானது என்று சொல்ல ! 


    நாவுகள் புளிப்பை தேடி ஏங்க
    உயிருக்குள் உயிர் தவிக்கும் 
    தவிப்பை உணர்ந்தேன் ....
    நாள் செல்ல செல்ல வெளிவர 
    துடிக்கும் ஆவேசத்தை, எண்ணி 
    அச்சமே கொள்கிறது மனது.... 


    உயிர் மீதான எனக்குள்ள அக்கறை
    குறைந்து விடுமோ என்று
    அடிக்கடி உதைத்து 
    நினைவுபடுத்துகிறாய்......!?  
    இதய வழி பொறுக்காமல் 
    எனக்குள்ளே அரற்றினேன் ....  
    துடித்தேன் .....கலங்கினேன் ....
    தூக்கம் தொலைத்து, விழித்தே 
    கிடந்திருக்கிறேன்  பலநாள்...


    நேற்று
    திடுக்கென்று  பெரிய  வலி ஒன்று
    இதயத்தை மோத....
    உச்சகட்ட உயிர் போராட்டம் ! 
    முழு சக்தியையும் பிரயோகித்து
    வெளி தள்ள பிறந்தே விட்டது....
    அழகாய், அருமையாய் அதே மர்ம
    புன்னகையுடன் !!?


     என் மொத்த 
     உணர்வையும், மௌனமாய் 
     மொழிப்பெயர்த்து.... 
     ஒற்றை வார்த்தையாய் 
     'என் பெயர் காதல்'  என்கிறது 
     நேற்றிரவு பிறந்த என் குழந்தை !!



தொடரட்டும்...!



  சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
  சண்டையிட்டு அத்தனையிலும்
  தோல்வி பிடிக்காத நான்
  தோற்று, நீ வெல்வதை ரசித்து !
  இதழ்கள் வலிக்கும் வரை 
  பேசிய பின்னும்
  இன்னும் மிச்சம் இருக்கிறதே
  வார்த்தைகள்.....!?
  உன்னிடம் இருந்து திரும்பி
  வர அடம் பிடிக்கும்
  குழந்தையாய் நான் !
  பிடிவாதமாய் செல்ல மறுத்து
  என்னிடமிருக்கும் நீ....!
  இவை இணையும் புள்ளியில்
  நான், நீ மறைந்து
  நாம் என்ற ஒன்றாக !?
  அதுவரை தொடரட்டும்
  இந்த அடமும் பிடிவாதமும் !!?

குறிஞ்சி பூ



    பனிரெண்டு  வருடம் கழித்து  
  பூத்த குறிஞ்சி பூவாய் நீ !
  அழகாய் இருப்பதால் ரசித்தேனா...?
  நான் ரசித்ததால்
  அழகாய் மாறினாயா ??  
  புதிதாய் என் சுவாசத்தில் 
  காதல் வாசம் வீச செய்து 
  வினா எழுப்பி 
  வேடிக்கை செய்கிறாய்.....!!
  அபத்தமும், அவஸ்தையும் 
  அன்றோ காதல் !
  தவணை முறை வருகை 
  தேவை இல்லை.... 
  தஞ்சமடைந்து விடு   
  நிரந்தரமாய் இன்றே !! 






இயற்கை....!

   
   
   பல அடிகள் வரை ஆழமாய் 
   தோண்டி.....
   தூண்களை எழுப்பி வெகு
   உறுதியாய் கட்டுமானம்
   வீடு எழும்பிற்று !
   கட்டியவனின் பெருமிதம் ,
   பலமான அஸ்திபாரம்
   எந்த புயல் மழைக்கும்
   என் வீடு தாங்கும்...??
   என்னே... 
   அவனின் அறியாமை
   வியந்தது இயற்கை....!
   பூமி பந்தே எந்த பிடிப்பும்
   இல்லாமல் அந்தரத்தில் !!?   



வலி



    ஒவ்வொரு வினாடியும் 
    விரைந்து  செல்லாதா
    என்று கடிகாரம் பார்த்து 
    பார்த்து கண் 
    நோக....
    
    இன்று மட்டும் ஏன் நேரம் 
    செல்லவில்லை என்று கடவுளை
    சபித்து..... சொன்ன நேரம் 
    வந்த பின்னும்,  ஏன் தாமதம் 
    என்று புரியாமல் விழி தேட... 
    
    மறுபடி கடிகாரம் பார்த்து
    கண்ணுடன் மனதும் நோக...
    காத்திருப்பின் தவிப்பும் வலியும் 
    புரியாமல் நிம்மதியாக இருக்க 
    எப்படி முடிகிறது...??!
    
    காத்திருப்பது சுகம் என்று 
    யார் சொன்னது...?
    சொன்னவர்கள் அனுபவித்து 
    பார்க்க வேண்டும் 
    அந்த வலியை......??!
    
    காத்திருப்பின் வலியை விட 
    வேதனை , அதன் பின் வரும்   
    உணர்ச்சிகள்  அற்ற மன்னிப்பு !
    
    காத்திருத்தலின் அதிகரிப்பில் 
    வார்த்தைகள் மரித்துவிடும் !
    உயிர்ப்பித்து விடும் மௌனம்....!!? 

சங்கமம்





ஊர் உறங்கியதும் எழும் 
உன் ஞாபகங்கள் உள்ளே அனலாய் 
கொதிப்பதென்ன......?! 


நான், என் சூழல்  அனைத்தும் மறந்தே
நீ ஒருவனே நிறைவாய் வலம் 
வருவதென்ன.......?! 


என்னை என்னிடமிருந்து பிரித்து
உனக்கானவளாய் மாற்றிய 
சுயநலமென்ன.......?!


ஒரு உடலில் இரு நினைவுகளாய்
எனக்குள் கூடு விட்டு கூடு மாறும் 
விந்தையென்ன.......?! 


யாருமற்ற நடுநிசியில் நம் 
இருவரின் நினைவுகளின்  
சங்கமமென்ன.......?! 


இதுவரை இல்லா மாயமாய்  
கண்ணாடியில் உன் உருவம் கண்டு 
வியந்ததென்ன.......?!


உயிர் தேடும் தேடல் என்று 
முடிவுறும் என்றே நாட்களை 
எண்ணியதென்ன.......?!


'உன்னை வென்றுவிட்டேன் பார்' என்று உன் 
இதழோர சிறு புன்னகை என்னை ஏளனம் 
செய்கிறதென்ன.......?! 


விடை பகிரமாட்டாய்  என்று தெரிந்தும் 
எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு 
முடிவுதான் என்ன...? என்ன....?? 


   

ஓவியம்

உன்னை ஓவியம் தீட்டுவதைபற்றியே யோசித்து 
கொண்டிருக்கிறேன்...!
இப்படி வரையலாமா,
அப்படி வரையலாமா
என்ற கற்பனையில்...!
அழகாக வரைய வேண்டுமே என்ற
கவலையில்.....!
நாட்கள் கடந்தன... 
இன்னும் வரைய தொடங்கவே
இல்லை இன்று வரை, 
என்பதே பெரும்சோகம் ?!



போகிறேன் ?!

  உன் நடையின் சப்தம்
  மௌனத்தின் நிசப்தம்
  இவைகூட உன் காதலை
  எனக்கு 
  உணர்த்த தான் செய்தன.....!
  
  நாம் பிரிந்து இருக்கும்
  நேரங்களிலும் நம் 
  காதலை நிரூபித்தது
  கனவுகள் கூடத்தான்...!
  
  தனி தீவாய் 
  நான் இருக்கிறேன்
  உன் நினைவு என்னும்
  நீரால் சூழப்பட்டு....!

  வானத்தில் பறந்து கொண்டே 
  சிறகுகளை சந்தேக படுகிறாய் நீ ! 
  பூவின் மென்மையை  ரசி 
  இதழ் இதழாய் 
  பிய்த்து ஆராய்ச்சி செய்யாதே ?!

****************************************
  
   காதல் போயின் காதல் போயின் 
  சாதல் என்றான் பாரதி. 
  மறுக்கிறான் 
  அவன் வழி வந்தவன்
  காதல் போயின் காதல் போயின் 
  மற்றொரு காதல்........??!

*****************************************

  சிறு ஊடல் வழக்கம்போல்
  கூடலாய் மாறும் என 
  ஏமாந்த மனம்.
  எந்த அணைகட்டி தடுக்க 
  போகிறேன்
  விழி நீரை
  வழியற்று யாசிக்கிறேன்.
  சாதாரணமாகி 
  போனதே நேசம் ??! 


******************************************




  

உன்னை....?!

  
  மிக பிடித்த மாலை நேர இளம்வெயில் !
  மேற்கே செந்நிற வானின் பிரமாண்டம் !
  மெல்ல இதழ் விரித்து கொண்டிருக்கும்
  நித்யமல்லி வாசனையின் ரம்மியம் !
  முழுதும் மலர்ந்து அழகை கொட்டி 
  சிரிக்கும் அந்திமந்தாரை ! 
  கதிரவன் மறைந்ததை பார்த்து  
  மெதுவாய் தலைநீட்டும் சந்திரன் !
   வீதியில் சிறு குழந்தைகளின்
   உற்சாக விளையாட்டு கூச்சல்கள் ! 
   மாலைநேர  முற்றம்  தெளித்ததால் எழும்
   மண்ணின் இனிய நறுமணம் ! 
   இவை அனைத்தும் தினம்  
   என்னை உற்சாகமடைய செய்யும்.... 
   ஏனோ மனம் எதிலும் லயிக்கவில்லை 
   இன்று விடியற்காலை  
   உன்னை பார்க்கவில்லை நான்...??!