என்னவனே....!


     இரவில் தூங்கும் முன்
     ரகசியமாய் ஒருமுறை
     உன் பெயர் உச்சரித்தே
     இதழ்கள்  மூடுகிறேன்....!
     ஆழமாய் ஒருமுறை
     உன் முகம் பார்த்தே
     விழிகள் மூடுகிறேன்...!
     ...........
     ...........
     தூங்கியவள்
     தூங்கியே விட்டால்.....?
     கடைசியாய்
     உச்சரித்தது, பார்த்தது
     உன் பெயராய், உன் முகமாய் 
     இருக்கட்டுமே.....!!
     


மனிதனாய்.....!

               
               இஸ்ரேலில் நடந்தாலும்
               இலங்கையில் நடந்தாலும்
               இழப்புகள் இழப்புகள் தான்....
               இறப்பவர்கள் யாராக இருப்பினும் 
               ஒரு தாயின் பிள்ளைகள் அன்றோ ?!
               நிறுத்தப்படுமா மனித அழிப்புகள் ?
               போர்களும், குண்டுகளும் யாருக்காக...?
               எதற்காக....? ஏன்.....? 
               தனிப்பட்ட விருப்பு வெறுப்பா ?
               விரோதமா....? 
               தன் வீடு மட்டும் பாதுகாப்பில்
               என்ற சுயநலமா ?
               நாளை பீரங்கி திரும்பும்
               உன் வீட்டையும் நோக்கி !?
               குண்டுகள் பாயும் உன் மீதும் ! 
               செத்து தானே ஆக வேண்டும்
               கத்தி எடுத்தவன் கத்தியால்...!!?
               எதை பெற இந்த போராட்டம்
               எல்லாம் இழந்தும்....!?
                ..............
                ...............
               அறுபது ஆண்டுகள் தான்
               சராசரி  ஆயுள்.....
               வாழ்ந்து விடுவோம்
               சாவதற்கு முன் கொஞ்சம்
               மனிதனாய்,  மனித நேயத்துடன்  !!



யோசி....!



               மலை, காற்று, கடல்
               என்றும் உணர்த்துவதில்லை 
               தன் இருப்பை......!


               மலை 
               கம்பீரமாய் நின்றிருப்பதை
               ரசித்ததில்லை நாம் 
               கொதித்து  தன் உள்ளக்கிடங்கை
               வெளியிடும் ஒருநாள் 
               சீறும் எரிமலையாய் ! 


              காற்று
              தென்றலாய் வீசியும் அதில்
              லயிப்பதில்லை நாம்
              வெறுத்துப் போய் 
              சுழன்றடித்து  ஒருநாள் 
              புயலாய் ! 


             கடல் 
             அழகாய் அலை நடை பயின்றும்
             கண்டுகொள்வதில்லை  நாம்
             பொறுமை இழந்து ஒருநாள் 
             பொங்கி கொந்தளிக்கும்  
             பேரலையாய் ! 


             உன்னிடம் இருக்கும் 
             என்
             இருப்பையும் 
             உணரவில்லை நீ !
             எரிமலையாய், புயலாய்,பேரலையாய்
             விரைவில் 
             என் நேசமும்....!!?







அழகு தேவதை நீ....!


நீ சிரிக்கும் போது சிதறிய முத்துக்களை அள்ளி
எடுத்தே கை வலித்திருக்குமோ
சிவந்திருக்கிறது  
உன் அன்னையின்  கை !


கவிதைகள்  சொல்லிவிட்டது  என்னிடம்
அந்த ரகசியத்தை
நீ பிறந்த  பின்பே  கவி  புனைய 
தொடங்கினாராம்  உன் தந்தை !


உன் மென் பட்டு பாதம் கண்ட மேக கூட்டம்
இறங்கி வந்து நீ நடக்க
பாதை அமைத்திட்டதோ
துணை இன்றி தவிக்கிறது வானம் !  


குயில்கள்  உன் மழலை மொழி  கேட்டு
தன்  மொழி  மறந்து 
திரிகின்றனவோ
ஆட மறுத்து அலையும் மயில்கள் !


படபடக்கும் உன் விழி பார்த்து
உன்னிடம் பாடம் பயில
வந்துவிட்டதோ  
தோட்டத்தில் காணவில்லை  வண்ணத்து பூச்சிகள் !   


என் வீட்டு ரோஜாக்களும் கிளம்பி விட்டன உன்னை வாழ்த்துவதற்கு.....!!!



இன்று நண்பர் தேவா அவர்களின் மகள் அக்ஷயாவின் பிறந்த நாள்.   
அந்த அழகு மகளை வாழ்த்தி இந்த சிறிய கவிதை.
இன்று போல் என்றும் சுகமாய் வாழ வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.













                                     

பிரியமே....!

   
                உன் 
                குரலின் கனிவு 
                பேச்சின் இனிமை
                காந்த விழி  வீச்சு
                உதட்டு சுளிப்பு
                இதழோர புன்னகை
                எண்ணும்போதே 
                நான் 
                இருப்பேன் அங்கே.....!!   
   
                உன் 
                வார்த்தைகளை 
                அணிந்திருக்கிறேன் 
                ஒவ்வொன்றாய் கோர்த்து 
                மாலையாக்கி !
                ஒலிக்கிறது 
                என் காதில் 
                நீ 
                பேசாத போதும் ! 
   
                புயல் வீசும் மனதால் 
                தடுமாறும்
                என்னை
                தாங்கிடும் நங்கூரமே ! 
                இருள் சூழ்ந்த இதயத்தின் 
                இருள்  
                நீக்கும் சுடரே !
                என் 
                நடையின் வழியே !
    
                வெகு 
                தூரத்தில் நீ 
                இருந்தும்
                உன் தோள் 
                சாய்கிறேன் இங்கே.....!!?


*****************************************************



துளிகள்....!





செல்லும் இடமெல்லாம் 
என்னை கேளாமல் 
தொடரும் என் கால்கள் !
தெரிந்தும்  
திரும்பி பாரா
கல்நெஞ்சக்காரன் நீ !!


பாறைக்குள்
தேரை !
உனக்குள் 
என் காதல் !



நீ புனையும் 
கவிதையின் 
முற்று புள்ளி 
நான் !?


சாலையில் செல்லும்போது 
கூர்ந்து பார்....
கூட்டத்தில் ஒருத்தியாய்
நானிருப்பேன் !


மணம் இல்லை 
என் காதலில் 
கனவில் பூத்த 
பூவே  நீ !  


உரத்த சத்தம், உரத்த இசை 
உரத்த சண்டை எதிலும் 
மிகையே இயல்பாய் !?
மௌனம் ஒரு வேதம் 
படிக்க சற்று சிரமம்
புரிந்த பின் வெளிச்சம் !!


********************************************************

விடை கொடு....!

       
        இருவரும் விடை பெறுவோம்
                                           
        பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!
                                           
        காதுகளுக்குள் கேட்ட
                                           
        உன் குரலின் இனிய ரகசியங்களை, 
                                           
        சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...!
                                            
        உனது பாடல்களை, 
                                            
        கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....!
                                            
        முதன்முதல் நீ தந்த  முத்தத்தை,  
                                            
        ஒரு  உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
                                            
        எதுவுமில்லை  உன் அடையாளங்கள்!!? 

        ஆனால்  என்னை கொஞ்சி அழைத்த கணங்கள் 
                                             
        நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
                                             
        பறந்து திரிவதை
                                             
        எப்படி கொல்வது...?

***********************************************************************************

       இனி
       கவிதை எழுத கூடாது
       உன்னை எண்ணி.....
       சபதம் எடுக்கிறேன் 
       நிதமும் !
       
அனைத்தும் 
       ஒரே நொடியில்
       மறந்து விடுகிறது 
       உன் குரல் கேட்ட 
       மறு நொடியில் !!?
                                             
       

இனியது காதல்......! தொடர் 1


வாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. பெண்ணாக 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு  எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக  காதலை சிதறடித்து கொண்டிருந்தேன்.....!!?

மனதிற்கு சுகமான, அதே நேரம்  நினைக்கும் போதெல்லாம்  மனதில் உற்சாகம்  கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் தான் இதுவரை எழுதவில்லை. இனியும் தாமதித்தால் என் மனதில் இருக்கும் காதல் 'காலாவதியாகிவிடுமோ' என்று தான் எழுத தொடங்கிவிட்டேன். காதல் என்றாலே அபத்தமும் அவஸ்தையும் நிறைந்ததுதான் என்று சொல்வாங்க...அது மாதிரி இந்த தொடரிலும் ஏதும் அபத்தம் இருந்தால் அழகாய் சுட்டிகாட்டுங்கள்....! (உங்களை நம்பித்தான் இந்த கடலில் குதிக்கிறேன், நீந்த சிரமபடுறேனு தெரிஞ்சா கொஞ்சம் கரை சேர்த்து  விட்டுடுங்க.....!!)  


" என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு  கோர்க்க வேண்டும் என்பதற்காகதான் "

'காதல்' இந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னொரு நிலவாய் காதலியை வருணிக்க முடிகிறது........!வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது......! காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது.....! பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......பரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்....பார்க்கும் அத்தனையிலும் தன் காதலி/காதலன்  முகம் தேடுகிறார்கள்......!!


உடல் ரீதியாக  பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக  பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். பருவம் வந்த அனைவருமே  காதல் வயபடுவார்கள்  என்றாலும் சிலர் ரொம்ப பிடிவாதமாக விலகி இருப்பார்கள்....

சிலர் நினைக்கலாம் புத்திசாலி பெண்கள்/ஆண்கள் காதலில் ஈடுபட மாட்டார்கள் என்று...!?  ஆனால் காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.

அதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் வெவ்வேறு வேதிப்பொருள்களே . அவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் , பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.......இந்த நிலை ஏற்பட்டு விட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்து விடும்.  

காதல் என்பது அப்பட்டமான 'சுயநலத்தின் வெளிபாடு' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இது உண்மையும் கூட இந்த சுய நலம் தனக்குரியவன்  தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் தன்னை மட்டுமே முக்கியமானவளாக கருத வேண்டும் என்பதை போன்றது தான். தன் காதலனை தனக்குள் முழுதும் இழுத்து வைத்து கொள்வதை   போன்ற அழகான சுயநலம்.....!!

இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான்.  ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில்  வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?

காதல் இருந்தால் கண்ணுக்கும் இமைக்கும் நடுவில் கூட வசிக்க  முடியும் என்பார்கள் காதலர்கள்.....!!

நான் : ரயில பிரயாணம் எப்படி ? நல்ல படியா இருந்ததா ??

நண்பர்  : அப்பர் பெர்த் குடுத்திடாங்க , அதான் கஷ்டமாப்போச்சு !

நான் : லோயர் பெர்த்காரங்கக் கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியது தானே ?

நண்பர்  : நானும் அதைத் தான் யோசிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!!? 

நான் : ????

உணர்வுகள் தொடரும்.....

மறதி...!

             
                
                ரசிக்க கற்று கொடுத்தாய்
                
                இயற்கை விடுத்து உன்னை !
                
                நேசிக்க கற்று கொடுத்தாய்
                
                உயிரை  விடுத்து உன்னை !
                
                காதலிக்க கற்று கொடுத்தாய்
                
                என்னை  விடுத்து உன்னை !
                
                மறக்க கற்றுக்  கொடுத்தாய்
                
                உன்னை விடுத்து அனைத்தையும் ! 
               
                ஆனால்
               
                கற்று கொடுத்த எதையும் 
               
                நீ கற்க மறந்து விட்டாய்..... !!?






உயிரே நீயாய்....!


உன் நினைவு 
எனக்கு வருவதே இல்லை !
உண்மைதான்.....?!

                     நான் உடுத்தும் உடையாய் !
                           உண்ணும் உணவாய் !
                     பருகும் நீராய் !
                           சுவாசிக்கும் காற்றாய் !
                     விரும்பி கேட்கும்
                           எனக்கு பிடித்த பாடலாய் !
                     என் பேருந்து பயணத்தில்
                           ஜன்னலோர சீட்டாய் !
                     என்னுடன் பேசி பின்னோக்கி
                           நகரும் மரங்களாய் !
                     ரசித்து நனைந்து மகிழும்
                           குளீர் மழையாய் !
                     என் தோட்டத்தில் தினம்
                           பூக்கும் ரோஜா மலராய் !
                     
                      வாசலில்  போடும் கோலமாய் - அதில் 
                           உன் பெயரே புள்ளியாய்
                      மாலையில் வீட்டு பந்தலில்   
                           மலர்ந்த நித்யமல்லியாய் !
                      கவிதை எழுதும் பேனாவாய் - அந்த
                            பேனா எழுதும் கவிதையாய்
                      அனைத்திலும் மெய்யாய், உருவாய்,
                             நீயாய் காண்கிறேன் - தனியே
                      இனம் பிரித்து நினைக்க  
                             அறியேன் நான்.....!!
                      என்னில் கலந்து, கரைந்து,
                             மறைந்து போன உன்னை 
                      நீயே தேடினாலும்  
                             கிடைக்க மாட்டாய்.....?!!