காதல் துளிகள்...!

         
         உனக்கான என் கவிதைகளின் 
         ஊடாய் நீ விட்டு செல்லும்
         மௌனங்கள் !
         என்னிடம்  சொல்லி விட்டன 
         உன் காதலை !


         இப்போதெல்லாம் 
         வடி கட்டிய பின்னே 
         என் சுவாசம் 
         வெளி செல்கிறது ! 
         உள்ளே உன் 
         நினைவுகளின் மிச்சங்கள் !!


         என் விடாபிடியான 
         பிடிவாத அன்பில்
         சண்டை, சமாதானம் 
         வந்தது, போனது 
         எல்லாமே காதல் தான் !!

          
          என்னை தனியாக 
          இருக்கவிடுவதில்லை
          துணையாக பக்கத்தில் 
          உன் நினைவுகள் !!

          
          உன் நினைவு மட்டும் 
          போதும் என்று 
          விலகியே  இருக்கிறாய்          
          என் பேராசை புரியாமல் !!?
********************************************************************

         
          


                        HAPPY NEW YEAR TO YOU ALL  


         

உன்னால்...!

                               
                               போராட்டங்கள் சங்கிலி தொடராய் தொடர 
                               தனிமையில் வெறுமையை தேடி மனம் அலைய  
                               சிந்தனை செய்தே செத்து கிடக்கிறது அறிவும் !

                               அகலக்கால் வைக்காதே விரைவில் அடிவிழும்
                               பெரியோர் அறிவுரை சரிதானோ 
                               என்றே பிதற்றுகிறது மனம் !

                                கண்ணீரால் கவலைகளை கழுவிவிட 
                                முயன்றும் கவலை தொலையவில்லை
                                கண்ணீரும் நிற்கவில்லை !

                                தட்டினேன் திறக்கவில்லை
                                கேட்டேன் கிடைக்கவில்லை
                                தேடினேன் கண்டடையவில்லை !

                                வெளிவர  வகையற்று ஓட்டுக்குள் 
                                நத்தையாய் ஒளிந்து கிடக்கிறேன் !
                                எதற்கும்  கலங்காத என்னை கதற 
                                வைக்கிறது வாழ்க்கை !
                                 
                                பற்றி கொள்ள உன்னிடம் கரம் நீட்டினேன் 
                                கரம் விடுத்து உயிர் பற்றினாய் உறுதியாய் !
                                ஒரே ஆறுதலாய், உயிராய் நீ இருக்கையில் 
                                இனி உதிரம் வற்றியும் துக்கம் இல்லை !

                                என் காயங்களை உன் கண் அசைவில் 
                                கவசமாய் மாற்றி விட்டாய் ஒரு நொடியில் !
                                நெருப்பை ஒரு போதும் கரையான்கள் அரிக்காது 
                                என்று சொல்லியே குளிர வைக்கிறாய் என்னை !

                               'எனதுயிரே ! துயரங்களை தூரப்போடு 
                               நாளையும் இருக்கிறது ஒரு போராட்டம் 
                               சந்திக்க வேண்டும் உற்சாகமாய்' 
                               என்றே திடப் படுத்துகிறாய் தினமும் !

                               'இன்னும் கொஞ்சம் அமைதி கொள்   
                               என் தோள் இருக்கிறது' என்றே 
                               சாய்த்து கொள்கிறாய் என்னை !
                               
                               சோகம் இடியாக நெஞ்சில் 
                               இறங்கும் போதெல்லாம்  
                               என் மனம் தளராமல் தாங்குகிறாய் !

                               அவமான கல்லில் அழகு சிலை 
                               அற்புதமாய் செதுக்குகிறேன் 
                               உன்னால் இன்று !!  

                                                                   ******************


எனக்கு முதல் வாழ்த்து சொல்லிய சௌந்தருக்கு என் அன்பான நன்றிகள் !!  
                      அனைவருக்கும்  என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!


இயல்பாய்...!

          
          நான் 
          செல்லும் வழியெங்கும்
          சந்தோஷ பூக்களை 
          தூவி செல்கிறாய் !
          நானோ துக்க மலர்களை
          கூசாமல் உன் மீது எறிகிறேன்
          இரக்கமின்றி !
          புன்னகையுடன் 
          பெற்றுகொள்கிறாய் 
          இப்போது அவையும் 
          சிரிக்கின்றன உன்னைப்போல !?
          வெட்கி தலைகுனிகிறது 
          என் கோபம் !!  
          

          இயன்றால் என் கோபத்தை 
          மொத்தமாய் சேர்த்தள்ளி 
          கேட்டு பார்
          உண்மையான நேசம் இது 
          என்றே பதில்  சொல்லும் !!  
          
        
          நூறாவது முறையாக படிக்கிறேன் 
          படிக்கும் போதெல்லாம் 
          என்னை அக்கறையாய் 
          நலம் விசாரிக்கிறது
          என் செல்பேசிக்கு நீ அனுப்பிய 
          குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'ஏனடா...?!

            
            உன் மீதான என் அன்பு  
            புரிந்தும்  சில நேரம்
            எதிர்வாதம் செய்வாய் !
            வேண்டுமென்றே 
            முரண்பாடாய் பேசி 
            சண்டையிடுவாய் !
            இப்படி சின்ன சின்ன 
            சண்டைகள் வந்தாலும் 
            இறுதியாக நான் 
            சொல்லியபடி  செய்துவிட்டு
            'உனக்காகத்தான் செய்தேன்' 
            என்று சொல்லி
            வெறுப்பேற்றுவாய்...!
            என்னை தவிக்க வைத்து 
            வேடிக்கை பார்ப்பதில் 
            என்ன சுகம் கண்டாயடா !?


            
            பேசி விடைப்பெற்று செல்லும் 
            ஒவ்வொரு முறையும்
            கவிதை ஒன்றை  
            எழுத வைத்து விட்டே 
            செல்கிறது உன் குரல் !!கவிதையாய் இங்கே...!

                  
              கவிதையாய் வாழ 
              முடியவில்லை
              கவிதை எழுதி 
              வாழ்கிறேன் !!

              
              இதயத்தின்
              இருப்பை
              இயல்பாய்
              இயற்ற
              இன்னும் 
              இயலவில்லை - என்
              இயலாமை
              இங்கே கவிதையாய் !!

              
              ஒரு சொல் வெல்லும்
              ஒரு சொல் கொல்லும்
              சொல்கிறார்கள் !
              உன் வார்த்தை 
              நெருப்பா  அமிலமா
              இருந்தும் ஆசையாய்   
              மேனி எங்கும் 
              அள்ளி பூசி கொள்கிறேன் !?               காப்பதற்கு உன்
              இரு கை இருப்பினும்
              விரும்பியே விழுகிறது
              தனிமையில் மனது !!

விரும்புகிறேன்...!

          
          ன்னை தவிர வேறு யாரையும்
          விரும்பவில்லை
          என்று மறந்தும் நீ 
          சத்தியம் செய்ததில்லை !


          ன் பேனா என்றும்
          எனக்காய் கவி எழுதியதில்லை !
          ன் மேகம் இதுவரை
          என்மீது மழை பொழிந்ததில்லை !


         ன் தேடல் ஒரு போதும்
         எனக்காய் இருந்ததில்லை !
        ன் கனவில் நான் வந்ததாய்
         இதுவரை தகவலில்லை !


         னக்குள் என்  நினைவுகள்
         இருப்பதாய் ஆதாரம் இல்லை !
        ன் வார்த்தைகள் என்னை
         விரும்புவதாய் சொன்னதில்லை !


         னக்காய் எழுதும் கவிதைகளை 
         நீ வாசித்ததும் இல்லை !
         ன் நடைகள், தவறியும் 
         என் வாசல் வந்து சென்றதில்லை !


         னது காத்திருப்புகள் 
         எனக்காய் காத்திருந்ததில்லை ! 
         உனக்கு பிடித்தவர்கள்
         பட்டியலில் என் பெயர் கூட இல்லை !
         ......................
         ......................
         ......................
         இருந்தும்
         'உன்னை நான் விரும்புகிறேன்' 
         உயிராய், உணர்வாய், யாவுமாய்....!!

நீயும் நானும்...!
      உலகம் மறந்து நாம் பேசி 
      கொண்டிருக்கும் நேரங்களுக்கு 
      சாட்சியாய் தூரத்தில் 
      அந்த ஒற்றை நிலா !

      கம்பீரம் உள்ளடக்கிய  கனிவான 
      உன் குரல் கேட்டு கண் சிமிட்டி
      நட்சத்திரங்கள் தங்களுக்குள் 
      சிரித்து கொள்கிறதே !

      மலர்ந்து வெகு நேரமான
      நித்தியமல்லியின் நறுமணம் 
      நாசி துளைத்து நானும் இருக்கிறேன்
      என்று நினைவு படுத்துகிறதே !

      குளிரும் மெதுவாய் தொட்டு  
       உடல் தழுவி மாதம்  மார்கழி
       என்று சிலிர்த்து  குறிப்பால்   
       உணர்த்துகிறதே !

       தோட்டத்து மரத்தில்   
       இரு காதல் பறவைகள்
       ரகசியமாய் பேசும் பேச்சுக்கள் 
       நம்மை பற்றியதாக இருக்குமோ ?!

       இருந்தும் என் கவலை எல்லாம் 
       'வந்தேன் நான்' என சூரியன் 
       குரல் கொடுத்துவிடுமோ    
       என்ற யோசனையில் இருக்கிறது !

       மெதுவாய் நான்  போகட்டுமா என வினா எழுப்ப 
       போகணுமா என்ற வினாவே உன் பதிலாய் வர 
       வெட்கத்துடன் உரையாடல் மீண்டும் 
       இடைவெளி இன்றி தொடருகிறது.....!!    

காதல் பூ...!                                           யுக யுகமாய்  தேடித் தேடி
                                           விழிகளால் சேர்த்து...
                                           இதயத்துள் சேமித்து...
                                           வைத்திருந்த 
                                           கனவுகளை...
                                           ஏக்கங்களை...
                                           தவிப்புகளை...
                                           மொத்தமாய் மொழி பெயர்க்க
                                           இந்த ஒரு இரவு போதாது...!!

                                           

                                           உன் மீதான என் காதல்
                                           சட்டென்று பற்றிக்கொண்ட 
                                           காதல்  தீ அல்ல !
                                           அவசரம் இன்றி
                                           சிறிது சிறிதாய்...
                                           துளி துளியாய்...
                                           இலை இலையாய்...
                                           மெல்ல மெல்ல...
                                           பயணித்து 
                                           இதழ் இதழாய்...
                                           எனக்குள் மலர்ந்த காதல் பூ !

                                         

என் சௌந்தரியமே...!


   வரைய தூரிகை எடுத்தேன் 
   வரைய மறுத்து
   வடிக்கிறது 
   உனக்கு ஒரு கவிதை ! 

   பாசத்தையும்  பரிவையும்  
   பாச கயிறாக்கி   
   என் நெஞ்சோடு 
   பிணைத்தாய் இறுக்கமாய் !  

   நீ பிறந்தாய் 
   உன் தாயின் மகனாக
   நான் பிறந்தேன் 
   என் தாயின் மகளாக

   இணையத்தால் இணைந்தோம்
   ஒரே தாயின் பிள்ளைகளாய் !
   இணைத்தது இறைவன் என்கிறேன் நான்
   விதி என்று சொல்லி சிரிக்கிறாய் நீ ! 

   வீட்டிற்கு வந்தேன்  உன்னை காண 
   தயங்கி வாசலுடன் திரும்பினேன் 
   சிறகொடிந்து  நீ  
   நிற்பதை  காண சக்தி அற்று !

   என்றாவது ஒரு நாள் என் வாசல் 
   வருவாய் நடந்து ! 
   அந்நாளும் வந்திடாதோ 
   என் மனமும் குளிர்ந்திடாதோ !


   என் மேல் நீ காட்டும் பாசம் 
   கண்டு என்னுள்ளம் கலங்குகிறது 
   என் பிள்ளையாய் நீ 
   பிறந்திருக்க கூடாதா என்று !! 


   என் சௌந்தரியமே
   உரக்க ஒருமுறை அழைத்திடு
   அம்மா என்றே
   பாலையிலும் பூ பூக்கட்டும் !!

'இனியது காதல்' தொடர் 2


காதலை பற்றி தொடர் எழுதத் தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் வீரியத்தை...! காதல் என்பது வயதை, இயல்பை மறக்க செய்யும் !!

"நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக  இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக  நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

(இந்த தொடரை மேலும் தொடருவதற்கு முன் சில விளக்கங்கள். தொடரின் முதல் பதிவிற்கு வந்த கமெண்ட்ஸ் வச்சி பார்க்கிறப்போ காதல் வந்தால் பெத்தவங்களை பகைச்சிட்டு ஓடி போய்டுவாங்க, இது உடலை மட்டுமே சார்ந்தது, உண்மையான காதல் என்று ஏதும் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க....!!? நாட்டில காதலால் நொந்தவங்க தான் பாதி பேர் என்று நினைக்கிறேன்)

நான் இந்த தொடரில் சொல்ல இருப்பது அழகான மென்மையான காதல் உணர்வை பற்றியது  மட்டும்தான். மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும்  காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே....! காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....?

 'காதல் ஒரு போதும் தோற்பதில்லை' 'காதலர்கள் தான்  தங்களுக்குள் தோற்று போகிறார்கள் !!'

எனக்குள் எப்போதும்  இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், குரலில் எப்போதும் தொனிக்கும் ஆணவ தொனி அனைத்தும், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து மண்டியிட்டு விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி.......!! ஒரு முறை இரு கண்களையும்  மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....


இதை காமம் என்று எள்ளி நகையாடி வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஒன்று காதலில் தோற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது  காதல் கிடைக்காமல் ஏங்குபவர்களாக இருக்க வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்....! மனிதர்கள் பிறப்பதற்கு காதல் ஒரு வேளை காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனிதனாய் வாழ நிச்சயம் ஒரு காதல் வேண்டும்.

பலருக்கும் தங்களின் முதல் காதல் இன்றும் ஸ்பெஷல் பொக்கிஷம் தான். அதை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு துள்ளல் எழத்தான் செய்யும். பதின்ம வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியாக இருந்தாலுமே அதிலும் கொஞ்சமாவது  ஒரு காதல் இருக்கத்தானே செய்யும்.....கொட்டும் மழையும் இதம் தான், சுட்டெரிக்கும் வெயிலும் குளுமைதான்.....!

காதலை பார்க்கும் பார்வைகள் வேறு படலாம்...ஆனால் காதல் மட்டும் அதே அழகுடன்,  அதே துள்ளலுடன், அதே பரவசத்துடன், அதே இனிமையுடன், அதே இளமையுடன் நித்திய கன்னியாக இருக்கிறது.

காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம், இருந்த கொஞ்ச நீரையும் தன் துணை அருந்தட்டும் என்று விட்டுக்கொடுத்த 'மான்கள் கதை'யை.....!இறுதிவரை இரண்டுமே ஒன்றுக்காக ஒன்று விட்டு கொடுத்து நீர் அருந்தவில்லை. குளத்தில் இருந்த சிறிய அளவு நீரும் அப்படியே குறையாமல் இருந்தது, அவை ஒன்றின் மேல் ஒன்று வைத்திருந்த காதலால் தான் !!

" நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்...! " என்னே அதன் அன்பு ! அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...!

ஒரு ஜென் கவிதை

காதலன்

அன்பே !
இன்று இரவுக்குள் நான் சாகப் போகிறேன்
எனக்குத் தெரியும்
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய்
நீ வருவாய் !

காதலியின் பதில்

அன்பே !
இந்த இரவுக்குள் நீ சாகப் போகிறாய்
அந்தியின் முதல் இருளாய்
நான் வருவேன் !

இதுதான் காதலோட அழகான உண்மையான சுத்தமான அன்பு ! தூய அன்பு இப்படி தான் இருக்கும் !

காதல் வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டும் இது காதலின்  கட்டளை மீற முடியாதே....! காதலில் சோகம் என்றால் கவிதைகள் இப்படியும் எழுதப்படலாம்...!

நேற்று 
என்  விழிகள் சிரித்தது 
உன் இதழோர புன்னகையில்  
இன்று 
விழிகள் நீர் வார்க்கிறது 
அது ஏளன சிரிப்போ என்ற
சந்தேகத்தில் !?

நேற்று இன்று 
ஒரே வித்தியாசம் 
நேற்று வாழ்ந்தேன் 
இன்று மடிந்தேன் 

எனது மரணமோ 
உன் வருகை நாளோ 
எது முன்பு வந்து 
என்னை அழைத்திடுமோ !  

சாவின் 
கடைசி நொடியில்
காதலி...
'வேறு யாரும் என் அளவிற்கு
உன்னை காதலிக்க முடியாது'

சாகும் போதும் ஒரு காதலிக்கு எவ்வளவு நம்பிக்கை தன் காதலின் மீது...!

அந்தஸ்து, படிப்பு, வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடை  கிடையாது....!

இந்த கவிதைகள் உங்கள் மனதை கொஞ்சமேனும் தொட்டு இருந்தால் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனதின் ஓரத்திலும் சொல்லபடாத ஒரு காதல், ஒரு நேசம்  ஒளிந்திருக்கலாம்.......! சொல்லி விடுங்கள்....சொல்லி விட்டு மனதை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.....!!பின் குறிப்பு....

நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....! அதை பற்றி தொடரும் தொடரில் சொல்கிறேன்....


மீண்டும் சந்திப்போம் காதலில்....!