இப்படியே...!

                                           
                                            உன் தோள்  சாய்ந்து
                                            கதைகள் ஆயிரம் பேசி 
                                            விரலுடன் விரல் கோர்த்து
                                            உனக்கினையாக நடந்து  
                                            விழியால் விழி ஊடுருவி
                                            உயிர் தொட்டு பிடித்து
                                            விளையாடி மகிழ்ந்து...
                                            
                                            உன் அத்துமீறல்கள் ரசித்து
                                            தயங்குவதாய் கொஞ்சம் நடித்து
                                            கெஞ்சலில் அனுமதித்து 
                                            செல்ல  சீண்டல் சண்டையுமாய்
                                            முப்பொழுதுகள் மயங்க...
                                            என் மடி சாய்த்து
                                            தலை கோதும் வேளை
                                            உன் அழகை விழியால் அள்ளி பருகி
                                            என் உயிரை நிறைத்து...
                                
                                            இவை எல்லாம் நிகழ வேண்டுமென
                                            கனவுகள் ஏதும்
                                            இதுவரை

                                            காணவில்லை
                                            ...
                                            ...
                                            ...
                                                                          
                                            நிஜமாக்க முயன்று கொண்டிருக்கிறேன் !படம்  - கூகுள்

வினோதினி...!

திடமுடன் மீண்டெழுவேன்
காப்பாற்றுகள்
என்றாயே

அறைசுவரில் பட்டு தெறித்த
அவள் கதறல் ஒலி
நெஞ்சை அறைகிறதே...
காலமே புண்ணை ஆற்று
வடு என்னை வதைக்கட்டும்!

தைரியம் தன்னம்பிக்கையின் 
மொத்த  உருவம் 
நீ சென்றுவிட்டாய்
கையாலாகாத கோழைகள்
மட்டுமே மிச்சம் இங்கே...
பெண்ணியம் பேசி
தொலைக்காதீர்கள்
பெண்ணை தொலைத்து விடுங்கள்
மொத்தமாக...

கொடுபாதகம் கண்டும்
கையை பிசைந்து கொண்டு
வேடிக்கைப் பார்த்த 
என்போன்றோரை
மன்னித்து விடுமா...
நாளை  வேறு பெண்ணுக்கு
அஞ்சலி செலுத்த
நலமாய் இருக்கவேண்டும்
நாங்கள் !
காதலர் தினம் வேறு வருகிறது
தயாராக வேண்டும்
நாங்கள் !

உனக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
சொல்வதுடன்
திருப்திபட்டுக்கொள்கிறது
எனது மனித நேயம் !!??


* * * * *

ஒவ்வொரு துயர மரணத்தின் போதும் இது  இறுதியாக இருக்கட்டும் என்ற எனது  வேண்டுதல்கள் மட்டும் மாறவில்லை ...பெண்ணை  சக்தி என்ற கொண்டாட்டவும் வேண்டாம் சகதியில் தூக்கி எறியவும் வேண்டாம். சக உயிராக உணர்ந்து மதித்தால் போதும். காதல் என்ற பெயரிலும் போக பொருளாக எண்ணி விளையாடுபவர்கள் மன்னிப்பு பெற  கூட அருகதை அற்ற வக்கிர மனித மிருங்கங்கள்...

பெண்களின் மீதான கொடுமைகள் தொடருவதை கண்டும் காணாமல் இருக்கும் சமூகம் திருந்தாதவரை வினோதினிகள் பலியிடபடுவதும் நிற்க போவதில்லை என்பதை மிகுந்த வலியுடன் பதிகிறேன்.

வினோதினியின் மரணம் கொடுமை என்றால்  வலியுடன் அவள் நடத்திய மரண போராட்டம் கொடுமையிலும் கொடுமை. இத்தனை நாளாய் அவளுக்கு கிடைக்காத நிம்மதி அமைதி இனியாவது அவளை இறுக தழுவட்டும் என்ற வேண்டுதலுடன்...