காதல் சுகமானது...!





பிரியமே 

எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை ...உள்ளத்தில் நிறைத்து வைத்திருப்பதை எல்லாம் அவ்வளவு எளிதாக எழுத்தில்  கொட்டிவிட முடிகிறதா என்ன... என்னிடம் காதல் ஒரு காற்றை போல வரவில்லை புயலை போல காற்றாற்று வெள்ளத்தைப்  போல வந்தது... எந்த நிமிடம் முதல் உன்னை உள்ளத்தில் கொண்டேன் என்பதும் தெரியவில்லை... 

காலம் பல கடந்து இன்று வெகு சுலபமாக குற்றம் சாட்டுகிறாய் மறந்துவிட்டேன் என்று... உனக்கென்ன தெரியும் எனது பிரியங்களை பற்றி... அந்தியில் விரிந்து விடியலில் வாடிவிடும் மலரை போன்றதல்ல அவை...  
உன் மீதான எனது பிரியங்கள் வைராக்கியம் மிகுந்தவை, எனக்கும் கட்டுபடாதவை... உன்னைவிட்டு விலகிச் சென்றுவிடவேண்டும் என்று முயலும் போதெல்லாம் தலையில் குட்டி எனக்கு வலி தந்து உனக்கு சந்தோசம் பரிசளித்து ரசிக்கும் பொல்லாத பிரியங்கள் அவை! காலத்தின் மீது பழி போட்டு மௌனித்து விலகி நிற்கும் உன் போக்கை  'புரிதல்' என புரிந்து வைத்திருக்கும் எனது பிரியத்தின்  அசட்டுத்தனம் உனக்கு புரிய  வாய்ப்பில்லை.

'காதல் என்பது நேசிப்பது மட்டுமல்ல சூழ்நிலை புரிந்து விலகி நிற்பதும்' என்று முன்பொருமுறை நீ சொன்னதை நான் இன்னும் மறக்கவில்லை... பிரியமானவனின் மௌனத்தை எவ்வாறு மொழிப்பெயர்த்தாலும் அது காதல் என்றே வருவதன் காரணமும் இதாகவே இருக்கிறது. மனக் கட்டுபாடுகளை தகர்த்து எறிந்த காதலை விதிமீறல் என குற்றம் சாட்டமாட்டேன் ... காதலுக்கு ஏது  விதிகளும் மீறல்களும் விலக்குகளும்...

உனது சாயல் இல்லாமல் எதுவும் என்னை கடப்பதுமில்லை எதையும் நான் கடந்ததும் இல்லை... வாசித்த புத்தகங்களில் ராஜராஜ சோழனும் பாண்டிய பல்லவ மன்னர்களும் உனது சாயலைக்   கொண்டிருந்தது உனக்கு தெரிய வாய்ப்பில்லைதான்

தட்டுத் தடுமாறி
மெல்ல நடை பயின்று 
விழும் போதெல்லாம் தூக்கி
விடும் உனது நேசக் கரங்களை
இறுகப் பற்றிக் கொண்ட நாள் முதல்
இன்று வரை காதல் 
எனக்கு 
சுகமானதாகத்தான் இருந்தது

வண்ணத்து  பூச்சி என்னுள்
பறந்த போதெல்லாம்
அதன் அழகை அசைவு விடாமல் 
உன்னிடம் வர்ணித்த நாள்வரை 
நேசம் 
எனக்கு பிடித்தமானதாகத் தான் இருந்தது

நான்  எனது என்பது மறந்து
உனது எல்லாம் எனதானது முதல்...
சுற்றிச் சுழலும் உன்னை 
காற்றும் தீண்டக் கூடாதென
என்  பார்வையால் வளைத்து வைத்துக் கொண்ட
கடந்த நிமிடம் வரை 
காதல் 
எனக்கு பிடித்தமானதாகத்தான் இருக்கிறது

பேசிக்கொள்ளாமல் காதலை தொடருவது எவ்வாறு என்ற ஆராய்ச்சியில் வென்று இன்று மௌன அகராதி எழுதிக் கொண்டிருக்கிறாள்  இந்த  அகராதி பிடித்தவள்.

குட்டி சண்டையின் பிறகு  ஒரு சமாதானம்  அதற்காக காத்திருக்கும் தருணத்தில் பூக்கும் ஒரு புது காதல் ...இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் பூக்கச்செய்து அன்றலர்ந்த மலராய் மணம் வீசுகிறது  எனது காதல் ! அப்படியேத்தான் தான் இருக்கிறது எனக்குள்ளும் காதல் அன்று போலவே இன்றும்... என்னவொன்று அன்று பேசிப்  பேசி காதல் செய்தோம் இன்று மௌனங்களைப்  பரிமாறி காதலை  இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நீ பேசாவிட்டாலும்
நான் பேசிக் கொண்டுத்தான் இருக்கிறேன் 
உனக்கு கேட்கவில்லை
என்பதற்காக நான் பேசவில்லை
என்றாகிவிடுமா என்ன?

என்னை போலத்தான் நீயும் என்னையே நினைத்துக் கொண்டு காலத்திற்குள் உன்னை புதைத்து மௌனித்திருக்கிறாய் என புரிந்து வைத்திருக்கிறேன். உனக்காக எழுதிய கவிதைகளை நானே வாசித்து கிழித்துப் போட்டுவிட்டு  காகிதங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் பறந்துச் சென்று என்னவனை நலம் விசாரித்து வாருங்களேன் என்று... கேட்கவும் பார்க்கவும் பேசவும் எதுவுமில்லாமல் போனாலும் நான் இருப்பேன்  உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உன் நினைவுகளை இறுக அணைத்துக் கொண்டு... !!!


இப்படிக்கு, 
உனது பிரியங்கள்.