காதல் சுகமானது...!

பிரியமே 

எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை ...உள்ளத்தில் நிறைத்து வைத்திருப்பதை எல்லாம் அவ்வளவு எளிதாக எழுத்தில்  கொட்டிவிட முடிகிறதா என்ன... என்னிடம் காதல் ஒரு காற்றை போல வரவில்லை புயலை போல காற்றாற்று வெள்ளத்தைப்  போல வந்தது... எந்த நிமிடம் முதல் உன்னை உள்ளத்தில் கொண்டேன் என்பதும் தெரியவில்லை... 

காலம் பல கடந்து இன்று வெகு சுலபமாக குற்றம் சாட்டுகிறாய் மறந்துவிட்டேன் என்று... உனக்கென்ன தெரியும் எனது பிரியங்களை பற்றி... அந்தியில் விரிந்து விடியலில் வாடிவிடும் மலரை போன்றதல்ல அவை...  
உன் மீதான எனது பிரியங்கள் வைராக்கியம் மிகுந்தவை, எனக்கும் கட்டுபடாதவை... உன்னைவிட்டு விலகிச் சென்றுவிடவேண்டும் என்று முயலும் போதெல்லாம் தலையில் குட்டி எனக்கு வலி தந்து உனக்கு சந்தோசம் பரிசளித்து ரசிக்கும் பொல்லாத பிரியங்கள் அவை! காலத்தின் மீது பழி போட்டு மௌனித்து விலகி நிற்கும் உன் போக்கை  'புரிதல்' என புரிந்து வைத்திருக்கும் எனது பிரியத்தின்  அசட்டுத்தனம் உனக்கு புரிய  வாய்ப்பில்லை.

'காதல் என்பது நேசிப்பது மட்டுமல்ல சூழ்நிலை புரிந்து விலகி நிற்பதும்' என்று முன்பொருமுறை நீ சொன்னதை நான் இன்னும் மறக்கவில்லை... பிரியமானவனின் மௌனத்தை எவ்வாறு மொழிப்பெயர்த்தாலும் அது காதல் என்றே வருவதன் காரணமும் இதாகவே இருக்கிறது. மனக் கட்டுபாடுகளை தகர்த்து எறிந்த காதலை விதிமீறல் என குற்றம் சாட்டமாட்டேன் ... காதலுக்கு ஏது  விதிகளும் மீறல்களும் விலக்குகளும்...

உனது சாயல் இல்லாமல் எதுவும் என்னை கடப்பதுமில்லை எதையும் நான் கடந்ததும் இல்லை... வாசித்த புத்தகங்களில் ராஜராஜ சோழனும் பாண்டிய பல்லவ மன்னர்களும் உனது சாயலைக்   கொண்டிருந்தது உனக்கு தெரிய வாய்ப்பில்லைதான்

தட்டுத் தடுமாறி
மெல்ல நடை பயின்று 
விழும் போதெல்லாம் தூக்கி
விடும் உனது நேசக் கரங்களை
இறுகப் பற்றிக் கொண்ட நாள் முதல்
இன்று வரை காதல் 
எனக்கு 
சுகமானதாகத்தான் இருந்தது

வண்ணத்து  பூச்சி என்னுள்
பறந்த போதெல்லாம்
அதன் அழகை அசைவு விடாமல் 
உன்னிடம் வர்ணித்த நாள்வரை 
நேசம் 
எனக்கு பிடித்தமானதாகத் தான் இருந்தது

நான்  எனது என்பது மறந்து
உனது எல்லாம் எனதானது முதல்...
சுற்றிச் சுழலும் உன்னை 
காற்றும் தீண்டக் கூடாதென
என்  பார்வையால் வளைத்து வைத்துக் கொண்ட
கடந்த நிமிடம் வரை 
காதல் 
எனக்கு பிடித்தமானதாகத்தான் இருக்கிறது

பேசிக்கொள்ளாமல் காதலை தொடருவது எவ்வாறு என்ற ஆராய்ச்சியில் வென்று இன்று மௌன அகராதி எழுதிக் கொண்டிருக்கிறாள்  இந்த  அகராதி பிடித்தவள்.

குட்டி சண்டையின் பிறகு  ஒரு சமாதானம்  அதற்காக காத்திருக்கும் தருணத்தில் பூக்கும் ஒரு புது காதல் ...இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் பூக்கச்செய்து அன்றலர்ந்த மலராய் மணம் வீசுகிறது  எனது காதல் ! அப்படியேத்தான் தான் இருக்கிறது எனக்குள்ளும் காதல் அன்று போலவே இன்றும்... என்னவொன்று அன்று பேசிப்  பேசி காதல் செய்தோம் இன்று மௌனங்களைப்  பரிமாறி காதலை  இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நீ பேசாவிட்டாலும்
நான் பேசிக் கொண்டுத்தான் இருக்கிறேன் 
உனக்கு கேட்கவில்லை
என்பதற்காக நான் பேசவில்லை
என்றாகிவிடுமா என்ன?

என்னை போலத்தான் நீயும் என்னையே நினைத்துக் கொண்டு காலத்திற்குள் உன்னை புதைத்து மௌனித்திருக்கிறாய் என புரிந்து வைத்திருக்கிறேன். உனக்காக எழுதிய கவிதைகளை நானே வாசித்து கிழித்துப் போட்டுவிட்டு  காகிதங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் பறந்துச் சென்று என்னவனை நலம் விசாரித்து வாருங்களேன் என்று... கேட்கவும் பார்க்கவும் பேசவும் எதுவுமில்லாமல் போனாலும் நான் இருப்பேன்  உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உன் நினைவுகளை இறுக அணைத்துக் கொண்டு... !!!


இப்படிக்கு, 
உனது பிரியங்கள்.

வாழ்க்கை ...!


                                      
                                    
                                        என்ன என்னமோ எண்ணங்கள்
                                        எண்ணங்கள் எண்ணி எண்ணி
                                        எண்ணங்களின் எண்ணிக்கை
                                        ஏராளம்...
                                        ஏதோ எண்ணுகிறேன்
                                        ஏதோ பேசுகிறேன்
                                        எதையோ செய்கிறேன்
                                        என் எண்ணம் போல்
                                        எதையும்
                                        எடுக்கவும் இயலவில்லை...
                                        எதையும்
                                        கொடுக்கவும் மனதில்லை !
                                     
                                        பயணத்தில் பல நிறுத்தங்கள்
                                        ஒவ்வொன்றாய் கடக்கின்றேன்
                                        உடன் வந்த பலரும்
                                        நிறுத்தத்திற்கு ஒருவராய்
                                        இறங்கி செல்ல
                                        என் நிறுத்தம் வருவது எப்போது 
                                        தெரியாமல் தொடருகிறேன்
                                         பயணத்தை...

                                        எனக்கான நிறுத்தம்
                                        எதுவென சொல்லக்கூடியவர்
                                        என ஒருவரை கை காட்டினார்கள்

                                        எனது எதுவென
                                        கேட்க எத்தனிக்கும் தருணம் 
                                        மிக சரியாக
                                        அவரின் நிறுத்தமும் வந்துவிட
                                        இறங்கிச் சென்றே விட்டார்...!
படம்- கூகுள்

இன்றேனும்...!                                                           ஓட ஓடி  ஒளிகிறாய்
                                                           என்னை என்னுள் ஒளிக்கிறாய் 
                                                           தேடத் தேட தொலைகிறாய்
                                                           என்னையும்  தொலைக்கிறாய் 
                                                           எங்கேயென  கெஞ்சினால்  
                                                           வானத்தில்  உனது குரல் 
                                                           அண்ணாந்து பார்க்கையில்
                                                           மேகத்தினுள்  மறைகிறாய்
                                                            பகலில்
                                                            கதிரவனை போலாகிறாய்
                                                            இரவினில் 
                                                            நிலவே நான்தான் என்பாயோ...!

                                                            கண்ட கனவொன்று

                                                            கலைந்தப் போது
                                                            எனதருகில் சிறகொன்றை
                                                            கண்டெடுத்தேன் நேற்றிரவு...!

                                                            இதோ என்  நேச இரைகளை

                                                            வானெங்கும் தூவுகிறேன்
                                                            பறவையென பறந்து திரியும் நீ
                                                            கொத்தித் தின்றுவிடு
                                                            இன்றேனும் ...!அன்றேனும்... !

                                      உன் ஒருவனை தேடி
                                      ஜென்மஜென்மமாய் அலைந்து திரிந்த 
                                      கதைகளை நான் சொல்ல 
                                      நீ கேட்க வேண்டுமென 
                                      நாட்களை வருடங்களில் கடந்து  
                                      காத்துக் கொண்டிருக்கிறேன் 
                                      அந்த ஒரு நாளுக்காக... 

                                     பேசாமல் தீர்ந்த பொழுதுகளை

                                     தேடிப்பிடித்து  
                                     பேசிப் பேசித் தீர்க்கவும் 
                                     வாழாமல் வெட்டியாய் கழிந்த இரவுகளை 
                                     வாழ்ந்துக் கழிப்பது எவ்வாறெனவும்  
                                     யோசித்துக் கொண்டிருக்கிறேன்    
                                     அந்த ஒரு நாளுக்காக... 

                                   தனிமை துயரினை தீர்க்க 
                                   கனவினைப் போன்ற மருந்தொன்றை 
                                   உனையன்றி வேறு யார் தருவார்?
                                   எனது கனவுகளை    
                                   நனவாக்கிய உனது கனவுகளை 
                                   கையில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்  
                                   அந்த ஒரு நாளுக்காக... 

                                     நெருக்கத்தின் நெருப்பில் நெஞ்சம் தகிக்க
                                     விழிகளின் மோதலில் மோகித்து
                                     விரல்களின் உரசலில் கிறங்கிக் கிடந்த 
                                     கற்பனைகளை சாத்தியமாக்கி  
                                     நமது முதல் சந்திப்பினை காவியமாக்க 
                                     முயன்றுக் கொண்டிருக்கிறேன்
                                     அந்த ஒரு நாளுக்காக...
                                      ...
                                      ...
                                      ...
                                                                                                                          
                                        
                                        அன்றேனும் செய்வாயா... காதல்!
ஏதுமில்லை ...!

                                               

                             
                                               இங்கே வெளிச்சம் இல்லை 
                                               ஆதலால் 
                                                நான் குருடாக இருக்கிறேன் 

                                                இங்கே வார்த்தைகள் இல்லை 
                                                ஆதலால் 
                                                நான் ஊமையாக இருக்கிறேன் 

                                                இங்கே சப்தம் இல்லை 
                                                ஆதலால் 
                                                நான் செவிடாக இருக்கிறேன்

                                                பார்க்கவும் பேசவும் கேட்கவும்  
                                                ஏதுமில்லாததை 
                                                மௌனம்  தனிமை    
                                                என்பதை விட 
                                                ஜடமாக இருக்கிறேன் 
                                                என்றும் சொல்லலாம் !!


சாவின் நிழல்...!

                                                 
                                                 

                                                  பல இரவுகள்
                                                  உறங்காமல் விழித்திருக்கிறேன்  
                                                  விடிவதற்குள் கண்ணீரால்
                                                  கரைந்து போய் விடும்
                                                  துயரங்கள் என்று

                                                  கை நோக நோக
                                                  அழுத்தித் தேய்க்கிறேன்
                                                  என்மேல் படிந்திருக்கும்
                                                  முன் ஜென்மக் கரைகளை
                                           
                                                  கானல் நீரால்
                                                  கழுவித் தீர்க்கிறேன்
                                                  பிறருக்கு நான் இழைத்த
                                                  நிகழ்காலத் தவறுகளை

                                                 அழிக்க முயன்றும் பிடிவாதமாய்
                                                 உட்கார்ந்துக்கொண்டு  வதைக்கின்றன
                                                 எனக்கு நான் செய்த துரோகங்கள்
 
                                                 அர்த்தமற்ற வாழ்க்கையில்
                                                 தேவனை தேடுவது மட்டும்
                                                 ஏனோ இன்னும் நிற்கவில்லை

                                                 இப்போதெல்லாம்

                                                 சாம்பல் பறந்து வந்து ஒட்டிக் கொள்கிறது
                                                 சுடுகாட்டை  கடக்கையில்...
                                               
                                                 கண்களை இறுக மூடிக்கொள்கிறேன்
                                                 சுற்றிலும் நடைப்பிண மனிதர்கள்...
                                          
                                                 தலையில் சூடிக்கொண்ட மலரிலும்
                                                 ரத்த வாடை...

                                                 கல்லறைத் தோட்டத்தில்
                                                 உலாவுகிறேன் கனவுகளிலும்...

                                                 பிய்த்தெறிய முடியவில்லை
                                                 பிடிவாதமாய் ஒட்டிகொண்டுவிட்ட
                                                 சாவின் நிழலை...

                                                 அதனால்தான் என்னவோ
                                                 சாவு வீட்டிற்குச் சென்றவள்
                                                 சிரித்துவிட்டு வருகிறேன்...!!!  

என் கனவே...!

                                                   


                                                  நட்சத்திரங்களை பரப்பி
                                                  வானவில்லை நட்டு வைத்து
                                                  நிலவுடன் கைக்கோர்ப்பது
                                                  உனது கனவாக உள்ளது
                                                  கனவு நிறைவேறவேண்டும்
                                                  என்பது  ஒன்றே
                                                  எனது பிரார்த்தனையானது 
                                                  இப்போது !

                                                  * * *
                                                  தீரத் தீர
                                                  மீண்டும் மீண்டும்
                                                  ஊற்றி நிறைத்துக் 
                                                  கொண்டிருக்கிறேன் 
                                                  என்னை...
                                                  நினைத்து நினைத்து
                                                  தீர்ந்துப் போகுமோ
                                                  உன் ஞாபகங்கள் !!?

                                                  * * *

                                                  நெஞ்சை பிசையும் கவலை
                                                  வருத்தும் வேதனை
                                                  எவை
                                                  என்னை மூழ்கடித்தாலும்
                                                  நொடியில்
                                                  கரையேறி விடுவேன்
                                                  என் பெயர் சொல்லி
                                                  நீ அழைக்கும் போதினிலே...  

                                                  * * *

                                                  புகைப்படம் எடுத்தப்போது
                                                  யாரை பார்த்தனவோ
                                                  இப்போது
                                                  என்னைத் தவிர
                                                  வேறு எங்கும் பார்ப்பதில்லை
                                                  உனது அந்த இரு விழிகள் !!