Showing posts with label காதல் தொடர். Show all posts
Showing posts with label காதல் தொடர். Show all posts

'இனியது காதல்' தொடர் - 3

நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....!
என்று முந்தைய தொடரில் சொல்லி இருந்தேன்.  இங்கே அதை தொடருகிறேன்....





'காதல்'  நேசிக்க மறந்தவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.  
                                                                                                        - ஷேக்ஸ்பியர் 



சென்னையின் சந்தடி மிகுந்த பகுதிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் ஒரு ஏரியா ஒன்றில் தான் நாங்கள் அப்போது குடியிருந்தோம். தனி தனி காம்பவுண்ட் வீடுகள் வரிசையாய் அணிவகுத்து ஒரு ஒழுங்கில் இருக்கும். தெருவின்  இரு மருங்கிலும் குல்மோகர் மரங்களும், கொன்றை மரங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து நிற்கும் அழகே அழகு. 


வசந்த காலத்தில் மரங்களில் சரம் சரமாக தொங்கும் கொன்றை மலர்களும், சிகப்பு நிற குல்மோகர் பூக்களும் மலர்ந்து மணம் வீசி அந்த ஏரியா முழுவதையும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடும். காலையில் வாக்கின் செல்பவர்கள் தரையில் படர்ந்திருக்கும் பூக்களின் மேல் தங்கள் கால்கள் படாதவாறு தட்டு தடுமாறி செல்வதை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். 

"திங்கள் கிழமை வந்தாலே இப்படித்தான், முதல் நாள் லீவ் நினைப்புலேயே ரொம்ப நேரம் தூங்கிறது...நேரம் ஆச்சு எழுந்திரு, காலேஜ் போற வழிய பாரு " 


ச்சே நல்ல கனவை இந்த அம்மா கெடுத்திட்டாங்களே , இத்தனை நாளா முகம் காட்டாமல் பேசிட்டு மட்டும் போன என் கனவுக்காதலன் , இன்று தான் மெதுவா என் பக்கம் திரும்பினான், நல்லா முகத்தை பார்க்கலாம்னா இந்த அம்மாவால அதுவும் போச்சு....?!! 


"இன்னும் என்னடி பண்ற ?" "இதோ வந்திட்டேன்மா"  மிச்ச தூக்கத்தை போர்வையுடன் மடித்து கட்டிலில் ஓரமாய்ப் போட்டுவிட்டு எழுந்தேன். 


முகம் வரை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்த என் தம்பியின் மேல ஜக்கில் இருந்த தண்ணிய ஊத்திட்டு, அவன் எழுந்து என்னை அடிக்க வருவதுக்குள் அங்கே இருந்து ஒரே ஓட்டம். எனக்கு என்னவோ இன்றைய விடியல் எனக்காத்தான் என்பது போல மனசு பூரா உற்சாகமாக இருந்தது.  

ஜன்னலை திறந்து சூரிய நண்பனுக்கு ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வாசல் தெளிக்க பக்கெட் தண்ணியுடன் வெளியில் வந்தேன். பக்கத்து காம்பௌண்டில் ஒரே சத்தமாக கேட்டது...ரொம்ப நாளா பூட்டி  இருந்த வீட்டில் இப்ப என்ன சத்தம் என்று மெதுவா வாசல் தெளிச்சிட்டே எட்டி பார்த்தேன்...புதுசா குடி வந்திருக்காங்க போல...அடடா இது என்னடா என் தனிமைக்கு வந்த சோதனை...?!! பக்கத்தில் யாரும் இல்லாத தைரியத்தில் எப்பவும் மொட்டை மாடியே கதின்னு இருப்பேன்...நானும் நிலாவும் தனியா பேசிட்டு பல நாள் இருந்திருக்கோம்...இனி அப்படி முடியாதேனு இருந்த உற்சாகம் எல்லாம் அப்படியே வடிந்துவிட்டது. 

"கோலம் போட போனா அதை பண்ணாம என்ன யோசனை" உள்ளே இருந்து குரல் வர, வேகமா ஏதோ ஒரு கோலத்தை போட்டுட்டு வந்திட்டேன். 


வெளியில் வந்த என் அம்மா "என்னடி welcome கோலம் போட்டுட்டு வந்திருக்க , யாரை வரவேற்க போற" னு கேட்க, 


எனக்கு  ஒண்ணும்  புரியல, வேற ஒரு  கோலத்திற்கு தானே புள்ளி வச்சேன், எப்படி மாறியது  !?? 


"சரி விடுமா, இதும் கோலம் தானே !"  என்று சமாளிச்சிட்டு காலேஜ் கிளம்ப ரெடியானேன். 

காலேஜில் எனக்கு இது முதல் வருடம். எனக்கு பிடிச்ச மேஜர் பிசிக்ஸ்...அதனால அந்த சப்ஜெட் மட்டும் ஒழுங்கா படிச்சிடுவேன், மத்ததெல்லாம் ஏனோ தானோ தான்...! குளிச்சி ரெடி ஆகி எனக்கு ரொம்ப பிடிச்ச நீல கலரில் வெள்ளை பூக்கள் இறைத்த சுடிதார் அணிந்து துப்பட்டாவை வேகமா பின் குத்தினேன், ஆ பின் விரலில் குத்தி ஒரு துளி ரத்தம் வெளியில் ஹாய் சொல்லுது. ஸ் என்னாச்சு இன்னைக்கு எல்லாம் ஒரே ஏடாகூடமா இருக்கேன்னு யோசிச்சிட்டே அம்மா கொடுத்த இரண்டு இட்லியை நின்னுட்டே உள்ளே தள்ளிட்டு இருந்தேன். 

காலிங்பெல் குக்கூ னு கூப்பிட,  இதோ வரேன்னு சொல்லிட்டே கதவை திறந்தேன்... இந்த ஏரியாவில் இதுவரை பார்க்காத  இரு புது முகங்கள், இளைஞன் ஒருவனும் , நடுத்தர வயதில் ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்கள்.  (நமக்கு தான் ஒரு  நிமிஷம் போதுமே அவங்களை ஸ்கேன் பண்ண.....!) 


அந்த பெண்ணிற்கு ஒரு 30 வயது இருக்கும் அழகா அம்சமா இருந்தாங்க.  அந்த பையனுக்கு அக்காவோ, அண்ணியாகவோ இருக்கலாம், அப்புறம் அந்த பையன், வயசு என்ன ஒரு 20 , 21 இருக்கும்...  அந்த கலரில் ஒரு பெண் என்றால் சூப்பர் பிகரா இருப்பா...ஆனா இப்படியா கோதுமை கலரில் பையன் இருக்கிறது...சுத்தமா நல்லா இல்லை...(பசங்க கொஞ்சம் மாநிறமா, லேசா கருப்பா இருந்தா ஓ.கே,  ஆனா இது ஒரு தேறாத கேஸ்...!) 


அந்த பெண் சிரிச்சிட்டே என் அம்மாவிடம், "வணக்கம். இந்தாங்க, குங்குமம் எடுத்துகோங்க... நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம் "   (என் சுதந்திரத்தை கெடுத்திட்டு குங்குமம் வேற தரீங்களா...?!) நானும் வாங்கனு ஒரு வணக்கம் சொல்லி அந்த குங்கும சிமில்ல  இருந்து கொஞ்சம் தொட்டு நெத்தில வச்சிட்டு "சரிம்மா நீங்க பேசுங்க, எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்" னு பேக் எடுத்து மாட்டிட்டு வெளியில் வந்துவிட்டேன். 

வெளி கேட்டை  திறக்கும் போது அந்த இளைஞன்  பக்கம் பார்த்தேன் , இரண்டு பெண்கள் பேசும் போது நாம என்ன செய்யனு வாசலில் தொங்கிட்டு இருந்த மணி பிளானட் செடியை ஆராய்ச்சி செய்றார் போல...?!!   சரியான அம்மாஞ்சி போலன்னு நினைச்சிட்டு ஒரு முறை சத்தமா "போயிட்டு வரேன்" னு கத்தினேன். "ஏண்டி இப்படி கத்துற, சரி பார்த்து போயிட்டு வா" அம்மா. 

இந்த சத்தம் கூட காதில் விழாத மாதிரி ஆராய்ச்சி தொடர்ந்து  கொண்டிருந்தது. என்ன ஜென்மமோ, இப்படி ஒரு வயசு பொண்ணு பக்கத்தில் இருக்கிறதை கூட கண்டுக்காம, பெரிய திமிர் பிடிச்சவனா இருப்பான் போல...!? சரி நமக்கென்ன வந்தது ? வாசல் கேட்டை இழுத்து அடைச்சிட்டு தெருவில் இறங்கி  நடக்க தொடங்கினேன். வழி முழுவதும் எதையோ மறந்து விட்டுட்டு வந்ததை போலவே தோன்றியது.....?!!


அவஸ்தைகள் தொடரும்...... 




பின்குறிப்பு
(முதல் முறையாக ஒரு கதை (?) மாதிரி எழுத முயற்சி பண்ணி இருக்கிறேன்...குறை இருந்தால் தயங்காம சொல்லிடுங்க...இத்தோட இப்படி எழுதுறதை நிறுத்திக்கிறேன் ...!!?)

பிரியங்களுடன் கௌசல்யா


     

இனியது காதல்......! தொடர் 1


வாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. பெண்ணாக 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு  எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக  காதலை சிதறடித்து கொண்டிருந்தேன்.....!!?

மனதிற்கு சுகமான, அதே நேரம்  நினைக்கும் போதெல்லாம்  மனதில் உற்சாகம்  கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் தான் இதுவரை எழுதவில்லை. இனியும் தாமதித்தால் என் மனதில் இருக்கும் காதல் 'காலாவதியாகிவிடுமோ' என்று தான் எழுத தொடங்கிவிட்டேன். காதல் என்றாலே அபத்தமும் அவஸ்தையும் நிறைந்ததுதான் என்று சொல்வாங்க...அது மாதிரி இந்த தொடரிலும் ஏதும் அபத்தம் இருந்தால் அழகாய் சுட்டிகாட்டுங்கள்....! (உங்களை நம்பித்தான் இந்த கடலில் குதிக்கிறேன், நீந்த சிரமபடுறேனு தெரிஞ்சா கொஞ்சம் கரை சேர்த்து  விட்டுடுங்க.....!!)  


" என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு  கோர்க்க வேண்டும் என்பதற்காகதான் "

'காதல்' இந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னொரு நிலவாய் காதலியை வருணிக்க முடிகிறது........!வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது......! காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது.....! பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......பரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்....பார்க்கும் அத்தனையிலும் தன் காதலி/காதலன்  முகம் தேடுகிறார்கள்......!!


உடல் ரீதியாக  பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக  பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். பருவம் வந்த அனைவருமே  காதல் வயபடுவார்கள்  என்றாலும் சிலர் ரொம்ப பிடிவாதமாக விலகி இருப்பார்கள்....

சிலர் நினைக்கலாம் புத்திசாலி பெண்கள்/ஆண்கள் காதலில் ஈடுபட மாட்டார்கள் என்று...!?  ஆனால் காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.

அதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் வெவ்வேறு வேதிப்பொருள்களே . அவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் , பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.......இந்த நிலை ஏற்பட்டு விட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்து விடும்.  

காதல் என்பது அப்பட்டமான 'சுயநலத்தின் வெளிபாடு' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இது உண்மையும் கூட இந்த சுய நலம் தனக்குரியவன்  தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் தன்னை மட்டுமே முக்கியமானவளாக கருத வேண்டும் என்பதை போன்றது தான். தன் காதலனை தனக்குள் முழுதும் இழுத்து வைத்து கொள்வதை   போன்ற அழகான சுயநலம்.....!!

இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான்.  ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில்  வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?

காதல் இருந்தால் கண்ணுக்கும் இமைக்கும் நடுவில் கூட வசிக்க  முடியும் என்பார்கள் காதலர்கள்.....!!

நான் : ரயில பிரயாணம் எப்படி ? நல்ல படியா இருந்ததா ??

நண்பர்  : அப்பர் பெர்த் குடுத்திடாங்க , அதான் கஷ்டமாப்போச்சு !

நான் : லோயர் பெர்த்காரங்கக் கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியது தானே ?

நண்பர்  : நானும் அதைத் தான் யோசிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!!? 

நான் : ????

உணர்வுகள் தொடரும்.....