202
undefined

உயிருடன் இருக்கிறேன்...!






வாசலில் போடப்பட்ட நாற்காலிகளில் 

துயரம் தோய்த்த முகத்துடன் பலர் 
அதோ நடுவில் இருக்கிறாரே 
அவர்தான் இறந்தவரின் மகன் 
யோசித்துக் கொண்டே அவரின் கைத்தொட்டு விலகி 
துக்கம் விசாரிக்கும் முறையை சரியாய் செய்தேனா 
யோசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்...
நடுக்கூடத்தில் கண்ணாடிப் பெட்டி 
கிடத்தப்பட்டிருந்த உடலில் சலனமில்லை 
சுற்றி அத்தனை பேர் கதறியும் !
போடப்பட்டிருந்த மாலைகளை விட 
எனது மாலை சிறியதாக இருக்குமோ
வந்த யோசனையை ஒதுக்கி வைத்துவிட்டு
மெல்ல இறந்தவரின் முகத்தைப் பார்த்தேன்
நான்  அழுகிறேனா ஆவலோடு 
முதுகில் துளைத்த  விழிகளை எண்ணி 
எனது விழிகள் வேலையை செவ்வனே 
தொடங்கிவிட்டிருந்தது.

'அழுகை வரவில்லை என்றால் முன்பு இறந்த உனக்கு மிக நெருக்கமான யாரையாவது நினைத்துக் கொள், அழுகை தன்னால் வந்துவிடும்'  சொல்லி அனுப்பிய சகோதரியை நினைத்துக் கொண்டேன்.

அழுகை வந்தேவிட்டது

இன்று இறந்தவனுக்காக நாளை இறக்கப் போகிறவர்கள் அழுவது விதியின் விந்தை !

கண்ணீர் வருவது நின்றதும் இனியும் நிற்பது நன்றாக இருக்காது என்று சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன், என் உறவுகள் ஒரு இடத்தில் மொத்தமாக இருக்கவும் அருகில் சென்று அமர்ந்தேன்.

ஆரம்பித்தன விசாரிப்புகள்...

'எப்படி இருக்கிற, இப்ப எங்க இருக்கிற, நல்லா இருக்கே இல்ல'  எல்லா கேள்விகளும் கேட்டு முடிக்கப்பட்டன!   

அடுத்து ஏதேனும் துக்க வீடு வந்தால்
அவசியம் செல்வேன்
இன்னும் நான் இறக்கவில்லை
உயிருடன் இருக்கிறேன் என 
உறவுகளிடம் அறிவிக்க...!!





0 comments: