![]() |
'ம்' என்று நீ சொல்லும்
ஒவ்வொரு முறையும்
ஓராயிரம் வார்த்தை சொன்னதாய்
திருப்திபட்டுக் கொள்ளச் சொல்கிறது
'ம்' உடன் தொடர்ந்து வந்த
உன் புன்னகை...!
* * *
சொல்ல வந்ததை மறைத்து
வேறு எதையோ
பேசி விடைபெறும்போது
விழுந்து நொறுங்குகிறது
மனதைவிட்டு வெளியேறிவிட்ட
ஒலியற்ற சொற்கள் !
* * *
என்னவன்
தூங்கவேண்டும்
தொல்லைப் பண்ணாமல்
தொலைந்து போங்கள்
துரத்தி விட்டேன்
உன் மீதான என் நினைவுகளை...
* * *
வழக்கம்போல காசோலையில்
இன்று கையெழுத்திட்டேன்
ஏதோ வித்தியாசம்
உற்றுக் கவனித்தேன்
எப்போது இணைந்தது
என் பெயருடன் உனது பெயர் !
* * *
அடுத்தவர் கவிதை வாசிக்கும் போது
உன் நினைவு வரும்
உன் கவிதை வாசிக்கும் போது
என் நினைவு போகும்
கவிதை யாருக்கானது என...!
* * *
எனக்கு உன் மௌனம் பிடிப்பதில்லை
உனக்கு என் சத்தம் பிடிக்காது
இருவரும் இணையும் பொழுதில்
இரண்டு மௌனங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன
சத்தமாக !
* * *
image -Google
0 comments:
Post a Comment