Posted by
Kousalya Raj
comments (0)
பல இரவுகள்
உறங்காமல் விழித்திருக்கிறேன்
விடிவதற்குள் கண்ணீரால்
கரைந்து போய் விடும்
துயரங்கள் என்று
கை நோக நோக
அழுத்தித் தேய்க்கிறேன்
என்மேல் படிந்திருக்கும்
முன் ஜென்மக் கரைகளை
கானல் நீரால்
கழுவித் தீர்க்கிறேன்
பிறருக்கு நான் இழைத்த
நிகழ்காலத் தவறுகளை
அழிக்க முயன்றும் பிடிவாதமாய்
உட்கார்ந்துக்கொண்டு வதைக்கின்றன
எனக்கு நான் செய்த துரோகங்கள்
அர்த்தமற்ற வாழ்க்கையில்
தேவனை தேடுவது மட்டும்
ஏனோ இன்னும் நிற்கவில்லை
இப்போதெல்லாம்
சாம்பல் பறந்து வந்து ஒட்டிக் கொள்கிறது
சுடுகாட்டை கடக்கையில்...
கண்களை இறுக மூடிக்கொள்கிறேன்
சுற்றிலும் நடைப்பிண மனிதர்கள்...
தலையில் சூடிக்கொண்ட மலரிலும்
ரத்த வாடை...
கல்லறைத் தோட்டத்தில்
உலாவுகிறேன் கனவுகளிலும்...
பிய்த்தெறிய முடியவில்லை
பிடிவாதமாய் ஒட்டிகொண்டுவிட்ட
சாவின் நிழலை...
அதனால்தான் என்னவோ
சாவு வீட்டிற்குச் சென்றவள்
சிரித்துவிட்டு வருகிறேன்...!!!
Labels:
கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (0)
நட்சத்திரங்களை பரப்பி
வானவில்லை நட்டு வைத்து
நிலவுடன் கைக்கோர்ப்பது
உனது கனவாக உள்ளது
கனவு நிறைவேறவேண்டும்
என்பது ஒன்றே
எனது பிரார்த்தனையானது
இப்போது !
* * *
தீரத் தீர
மீண்டும் மீண்டும்
ஊற்றி நிறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என்னை...
நினைத்து நினைத்து
தீர்ந்துப் போகுமோ
உன் ஞாபகங்கள் !!?
* * *
நெஞ்சை பிசையும் கவலை
வருத்தும் வேதனை
எவை
என்னை மூழ்கடித்தாலும்
நொடியில்
கரையேறி விடுவேன்
என் பெயர் சொல்லி
நீ அழைக்கும் போதினிலே...
* * *
புகைப்படம் எடுத்தப்போது
யாரை பார்த்தனவோ
இப்போது
என்னைத் தவிர
வேறு எங்கும் பார்ப்பதில்லை
உனது அந்த இரு விழிகள் !!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்