உன்னில் நான் !

   
      
      செம்மண் சேர்ந்த மழைநீர்,
      அதன் தன்மையை பெறுவதை 
      போல....
     " உன்னில் விழுந்த நான் "  

**********************************************************************


   ஒரு தரம் புல்லாங்குழல் 
   என்னை மீட்டுத் தந்தது !


   ஒரு தரம் காதல் 
   என்னை மீட்டுத் தந்தது !


   ஒரு வண்ணத்துப் பூச்சியும்
   என்னை மீட்டுத் தந்தது !


   நான்தான் அடிக்கடி 
   தொலைந்து விடுகிறேன்...!!

***************************************************
படித்ததில் பிடித்தது 





செல்லமாய்...

 
   
   ஒரு முத்தத்தை 
   ஒரு உடலில் 
   ஒரு மனிதன்
   எங்கெல்லாம்
   ஒளித்து வைப்பான்.....?!
   அதற்கு
   எவ்வளவு காலம் தான் 
   காவல் இருப்பான்...?!
   தீர்வு கேட்டேன் உன்னிடம்,
   
   'சொர்க்கத்தில் திருடிய முத்தத்தை,
    சொர்க்கத்திலேயே ஒப்படைத்து விடு '


    என்றாய்...!!



தேவதை போல.....!!

   மனம் லேசாய் மிதக்கிறது....
   சூழ்ந்த காற்றில் சுகந்த மணம்
   கண் மூடி முகர்ந்த உடலும் கனமின்றி 
   காற்றாய் மிதக்க...என்னே சுகம்!


   ஒரு கையால் மறுகையை   
   கிள்ளி பார்த்தும், வலி 
   மூளையை சென்றடையவில்லை ?!
   வலி உணரா இன்ப பரவசம்..!!
   மெதுவாய் என்னை சுற்றி,
   விழி திறந்து நோக்க...
   என்னை பற்றியே பலரும்,   
   ஒரு குறையும் இன்றி நிறையே 
   பேசுகின்றனர் ...?!   


   மேளத்துக்கு,   
   சிலர் தாளம் மாறி நடனமாட, 
   ஒலியில் இதய துடிப்பே 
   என் காதில் விழவில்லை..!!  
   மாலைகளும் பூக்களும் என்னை 
   இன்னும் அழகாய் காட்டுகிறது....!!
   தேவதை போல.....!!


   சொல்லவொன்னா மகிழ்ச்சியில்,
   உற்சாக துள்ளலாய் மெதுவாய், 
   சற்றே 
   கீழே பார்க்க,  துணுக்குற்றேன் !!
   மற்றவர்கள்  இரண்டு காலில் 
   நடக்க, 
   நானோ எட்டு கால்களில்...!!??     

   உயிருடன் அவர்கள்..... உயிரற்று  நான்.... !!



நிழலாய் நீ...



யாரையும் மனம் நோக 
பேசியறியாத எனக்கு, மறைவாக
நீ  நடத்தும் யுத்தத்தை 
எதிர்கொள்ள எவ்வாறு இயலும்?


உன் கோபம் முன் என் கூக்குரல்
எடுபடாமலே போய்விட்டது...
'கடைசிவரை மறவேன்'  
என்ற வாக்குறுதி இன்று 
காணாமல் ஓடியது எங்கனம்?


நான் எங்கே, யாரிடம் பேசினாலும்
அங்கே நிழலாய் நீ தெரிவதை
எப்படி புரிய வைப்பேன்..?!
சக்தி அற்று, என் சுயம் 
தேடி கொண்டே இருக்கிறேன்....


நீயே நான் என்றே, நான் எண்ண
நீ உன்னில் இருந்து என்னை 
பிரித்தது ஏன்....இந்த பிரிவு
உனக்கு இன்பம் என்றால் 
துன்பமும் வரமே எனக்கு...

வார்த்தையால்  என் இதயம் 
கிழிக்காதே, உனக்கு வலிக்கும் 
என்றே அஞ்சுகிறேன்...


உன்னிடமே....!!

  
    பெருமூச்சுடன் என் நெஞ்சம்....!
    உன்னை பிரிந்து வந்த பின்னும்,
    வராமல் உன்னிடமே....!
    நீயோ எதையும்
   அறிந்து கொள்ளாதவனாய் 
   பணியே கதி என்று...!?
   நான் உன்னையே நினைத்து
   ஒன்றும் இல்லாமல் போய்விடுவேன்
   என்றே அஞ்சுகிறேன் நிதமும்..?!
   என் அச்சம் தவிர்க்க நீ
   முயலாதது ஏனோ...?
   என் பொறுமை என்னை
   புறம் தள்ளுகிறதே...,
   மனதில் கொதிக்கும் வெப்பம்
   விரைவில் எரிமலையாய்...!
   அதில் சாம்பலாய் போகும் முன்னே
   கோபம் தணிக்க ஒரு
   பார்வையாவது வீசி விட்டு செல்.


*****************************************************
   



நீயாகிய நான் !!





அவனில்லாமல் நான் இல்லை,


நம்பிக்கை.....!


நானில்லாமல் அவனில்லை,


பெரிய நம்பிக்கை.....!


நான் சொல்கிறேன்,


அதையும் தாண்டி 


நானில்லாமல், 


எப்பிறவியிலும் அவனில்லை...!!


இதுவே நீயாகிய நான்...!!!


*****************************************************


"உன் மௌனங்கள்  எனக்காகவும்
என் மௌனங்கள்  உனக்காகவும்
காத்து இருக்கின்றன....
.............
.............
...........
காதலுடன்......!!"




*******************************************

தொடரும் குரல்...





சிறு வயதினலாய் பொம்மை  வைத்து  
விளையாட விரும்பினேன்....
உடனே நிறைவேறியது...ஆசை தீரும்  மட்டும் 
படிக்க விரும்பினேன்....
பல பட்டங்கள் என் பெயருக்கு பின்னே.
அன்பான, அருமையான, கம்பீரமான,
துணை வேண்டும் என்றேன்,
தேடி கண்டு, நிறைவேற்றினர் பெற்றோர்!


இருவரும் இணைந்தோம் மணவாழ்வில், 
ஒன்றாய் பறந்தோம், பறவைகளாய் ....
ஆடி களித்தோம், மற்றவர் பொறாமைபட 
கடவுள் என்னை மட்டும் அதிகமாய் 
ஆசிர்வதித்ததாய், ஆனந்த கூத்தாடினேன்....
நாட்கள்  நகர்ந்து மாதங்களாயின...!
மாதங்கள், வருடங்களாயின....!


என்னிடம் எதையோ தேடின
என் உறவினர்களின் விழிகள்...
தாமதமாகத்தான் உணர்ந்தேன் ,
நான் நானாகவே இருக்கிறேன் என்று...!!
என் கைகள் அனிச்சையாக என் 
வயிற்றை தடவின ஏன் இல்லை என்று...??
என்னை ஆச்சரியத்துடம் அன்று நோக்கிய 
உறவினர்களின் விழிகளில் இன்று 
ஏளன பார்வை......


அதை தவிர்க்க வீட்டுக்குள் சிறை 
வைத்தேன் என்னை,  துணையின் சமாதானம் 
காதில் விழுவதாய் இல்லை 
இப்போதெல்லாம்.... முழுதாய்  என்னை 
கடவுள் ஆசிர்வதிக்க தவறியது ஏன்?
பெற்றோர் வைத்த பெயர், மறைந்து 
வேறு  ஒரு பெயரில் அழைக்கின்றனர்..!


பிற பெண்கள் சாதாரணமாய் 
எதிர்கொள்வதை, நான் ஆவலாய் 
எதிர்பார்கிறேன்...,  ஒவ்வொரு மாதமும்.... 
எதிர்பார்த்து ஏமாறுகிறேன்....
ஏமாற்றி கொண்டே இருக்கிறது 
காலமும்.... 


கொஞ்ச நாளாய் தொடர்ந்து 
ஒரு குரல்....! 
என் காதில் ஒலித்துக்கொண்டே 
இருக்கிறது......!


"மலடியே மகிழ்ந்து பாடு,  நீ பல பிள்ளைகளின் தாய்....!!"