உனக்கு பிடித்த
உன் கற்பனைகளுக்குச் சிறகு தந்த
வாதாம் மரத்தின் அருகே
உன் சுவாசத்தின் ஒருத் துளி தேடி
அமர்ந்திருக்கின்றேன்
வெகு நேரமாய் ...
ஒன்றாய் நாம் திரிந்த வீதிகளில்
உன் நினைவுகளை ஏந்தி
தனியாய் அலையும் எனக்கு
ஒரு நம்பிக்கை இருக்கிறது
என்னை அழைத்து வந்த
அந்த ஏதோ ஒன்று
உன்னையும் இங்கே
அழைத்து வரும் என்று...
நீண்ட காத்திருப்புகள்
பதிலொன்றை என் மீது
வீசி எறிந்தது கேள்வியாக...
கடைசியாக நீ பேசிய
'புரிய முயற்சிச் செய்'
என்பதன் அர்த்தம்
'பிரிய முயற்சிச் செய்'
என்பதாக இருக்குமோ...?
ஒரு அத்தியாயம் ஒன்றின்
முடிவுரை எழுதி முடித்து
முடிந்து
பனிப் போர்வைக்குள்
தனித்து
நான் விறைத்துக் கிடக்கும்
வேளையில்
நீ என்னைக் கடந்து போகலாம்
அது நானென்று அறியாமல்
இது ஏதோவொன்று என...!
படம்- கூகுள்
1 comments:
ஏன் இத்தனை சோகம்..தனிமை தந்த பிச்சையா ? பிரிவு தந்த பரிசா ? எதுவாக இருந்தாலும், வாதம் மர நிழலில் சுவாசத்தைத் தேடியது சரி... அந்த சுவாசத்தை தங்களுக்குள் தேடிப் பார்த்திருந்தால் ?? ஓ! இந்த கவிதை பிறக்காமலேயே இறந்திருக்கும்... நல்ல பதிவு
Post a Comment