வந்துவிடு.....!!?

     
     தொட்டுவிட அடம் பிடிக்கும்
     மனதை எச்சரிக்கிறேன்
     நெருப்பு வளையத்துக்குள் நீ
     அதீத பாதுகாப்பில்.......!!
     எடுத்து செல்லேன் என 
     அழைப்பு விடுத்தும்
     பேதை புன்னகை பார்த்து
     பேதலித்து போனேன்.......!!
     களவாட எண்ணம் இல்லை 
     வந்துவிடு 
     நீயாக......!!
     இல்லை தந்துவிடு 
     என் காதலை....!! 
     உன் காலடியில் 
     மண்டியிட்டு கிடக்கிறதே !!  
     இல்லை விட்டுவிடு 
     பிழைத்து  போகட்டும் 
     இவள் .....!!




மறுக்கிறாய்.....?!



   காத்திருந்தேன் உனக்காக 
   பல முறை சொல்லியும் 
   நம்ப மறுக்கிறாய்.....?!
   காத்திருந்த நேரம் 
   பல கவிதை பூத்ததை
   சொல்லியும் நம்பவில்லை ....?!
   வேறு சிந்தனை இன்றி 
   உன்னை மட்டுமே 
   மனம் சுற்றி வந்ததை 
   எப்படி புரிய வைப்பேன்....?!
   காலையில் தண்ணீர் இன்றி 
   வாசல் தெளித்ததை 
   என்னவென்று சொல்ல.....?!
   விழி மூடாமல் தவித்ததை 
   என் கண் பார்த்தும்
   நம்ப மறுக்கிறாய்...?!
   மொத்தத்தில் 
   உன்னை அறைந்தால் என்ன ??!

*******************************************************

   உன் மர்ம புன்னகையை
   வார்த்தைகளாக்கினால்
   'என் மீதான உன் காதல்
   என்னிடம் விட்டு சென்றதில்
   இதுவும் ஒன்று' என்றே 
   வருகிறது...!!

*******************************************************
  நீ சொல்லும் 
  ஒரு  வார்த்தையில் 
  என் உலகம் 
  மௌனமாகி விடும்
  ரகசியமாய் நீ அழைக்கும் 
  'என் பெயர் !!' 



ஏன் வந்தாய்....?!

மனதைப் புரட்டி போட்ட 
வார்த்தை ஜாலங்கள் - கருத்துகளால் 
முரண்பட்டும் பிடித்துப்   
போன வாதங்கள் - உயிரை 
ஆழமாய் ஊடுருவி 
சாகடித்த பேச்சுக்கள் - விளைவு 
தெரிந்தும் என்னை 
இழந்த தருணங்கள் - காதலை 
புதிதாய் எனக்கு 
சொல்லிய  சந்திப்புக்கள் - அன்பிற்கு 
புது இலக்கணம் 
எழுதிய புரிதல்கள் - உன் கர்வத்தை 
அடக்க நான் 
எடுத்த சபதங்கள் - திசை மாறி 
தாக்கி உன்முன் 
மண்டியிட்ட என் கர்வங்கள் - பல 
ஜென்மங்கள்  உனை தொடர 
மேற்கொண்ட வேண்டுதல்கள் - புரிந்தும் 
உன்னிடம் கேட்கிறேன்
            
            'ஏன் வந்தாய் என்னுள்....?!!'





போதிமரம்.....!!


சரித்திரத்தை படிக்காமல் 
சரித்திரமாகி போனார்கள்....! 
மனிதம் ஏலம் போகும் ஊரில்
மனிதனாய் வாழ துடித்த 
பேராசை....!!
மரணம் பார்த்து மரத்துப்போன
விழிகளில் வழியும் கனவையும்,
கண்ணீரையும் துடைக்க 
வலுவற்று  .....வாய் இருந்தும் 
ஊமைகளாய்......!?
குண்டு சத்தம் பழகிய 
காதுகளுக்கு 'அம்மா' என்று 
அழைக்கும் குரல் கூட 
அதிர்வாய்.....!?

முகமூடி அணிந்த உலகில்
எம் மக்கள் மட்டும் நிர்வாணமாய்....!
கண்ணீரும், கோபமுமே நிரந்தரமாகி 
அதுவும் இன்று
வர மறுக்கிறதே.......??! 
யுத்தத்தின்  மிச்சங்களாய், 
உயிரை மட்டும் தாங்கி
அகதி என்ற பெயரில் 
எந்த விதி செய்த சதி......??!
துப்பாக்கி ஏந்தியவனை மட்டும் 
யுத்தம் ப(ழி)லி வாங்குவதில்லை,
அப்பாவிகளையும்......??! 

போலி பிம்பங்கள், தனி மனித இன்ப 
துன்பங்கள், சுயநலம், அரசியல், 
சினிமா என்று சுற்றிச் சுழலும் 
உலகத்தில்...  
எங்கள் இருப்பிடம் நிரந்தர  
சாத்தியமா.....?? 
கேள்விகளிலேயே கழியும் 
இரவுகள்...... !!?

மூன்று வேளை உணவு, இருப்பிடம், குடும்பம் என்று எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு குறை என்பது போல் சலிப்பாய் வாழ்வை நகர்த்துகிறோம்  நாம்...... ஒரு முறை நமக்கு அருகில் நாடோடிகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் அகதிகளாய்  நம் ஊரின் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருக்கும்  நம் ரத்த உறவுகளுடன் சென்று பேசி அவர்களின் துயரம் தாங்கிய கண்ணீர் கதைகளை கேட்டு அறியவேண்டும்.......

"போதிமரம் வேண்டாம் அகதி முகாம் போதும் ஞானம் பெற......!!"


  

சரணடைகிறேன் !!




    சொர்க்கமும் நரகமும் 
    ஒன்றாய்  கண் முன்
    தெரிகிறது 
     உன்னால்...!
    
    உன் புன்னகை உண்டாக்கிய 
    பூகம்ப
    இடிபாடுகளில்  தேடுகிறேன்
    என் இதயம்.....!!

    மாறி மாறி வார்த்தை அம்புகள்
   எய்தும்  சிறிதும்
   உரைக்கவில்லை....
   எறிந்தது  நீ என்பதால்...?!

   பிடித்த  புது மழையில் 
   நனையும் முன் 
   குளித்துவிட்டேன்.... உன்
   வார்த்தை நெருப்பில் !

   தாய் அடித்தும் 
   அவள் மடி தேடும் 
   குழந்தையாய்
   சரணடைகிறேன் உன்னிடம் !!



என் பெயர் காதல்....!!



    என்னை புரிந்து கொண்டதாய் 
    நீயும்....உன்னை புரிந்து கொண்டதாய்
    நானும் பொய் சொல்லி 
    கொண்டு  இருந்திருக்கிறோம்  
    இதுவரை..... !!


    ஓயாமல் பேசித்தீர்த்த பொழுதுகள் 
    கொஞ்சி கழித்த தருணங்கள் 
    முத்தத்தில் திளைத்த மோக நிமிடங்கள்
    நாள் தவறாமல் போட்ட சண்டைகள்
    கூடலில் முடியாது போன ஊடல்கள் 


    மெய்  மறந்த ஒரு நிலையில்,
    என்னுள் நீயும்.... 
    உன்னுள் நானுமாய்.... 
    கரைந்த தருணத்திற்கு,
    பின் வந்த காலை நேர மயக்கம்
    மசக்கைக்கானது என்று சொல்ல ! 


    நாவுகள் புளிப்பை தேடி ஏங்க
    உயிருக்குள் உயிர் தவிக்கும் 
    தவிப்பை உணர்ந்தேன் ....
    நாள் செல்ல செல்ல வெளிவர 
    துடிக்கும் ஆவேசத்தை, எண்ணி 
    அச்சமே கொள்கிறது மனது.... 


    உயிர் மீதான எனக்குள்ள அக்கறை
    குறைந்து விடுமோ என்று
    அடிக்கடி உதைத்து 
    நினைவுபடுத்துகிறாய்......!?  
    இதய வழி பொறுக்காமல் 
    எனக்குள்ளே அரற்றினேன் ....  
    துடித்தேன் .....கலங்கினேன் ....
    தூக்கம் தொலைத்து, விழித்தே 
    கிடந்திருக்கிறேன்  பலநாள்...


    நேற்று
    திடுக்கென்று  பெரிய  வலி ஒன்று
    இதயத்தை மோத....
    உச்சகட்ட உயிர் போராட்டம் ! 
    முழு சக்தியையும் பிரயோகித்து
    வெளி தள்ள பிறந்தே விட்டது....
    அழகாய், அருமையாய் அதே மர்ம
    புன்னகையுடன் !!?


     என் மொத்த 
     உணர்வையும், மௌனமாய் 
     மொழிப்பெயர்த்து.... 
     ஒற்றை வார்த்தையாய் 
     'என் பெயர் காதல்'  என்கிறது 
     நேற்றிரவு பிறந்த என் குழந்தை !!



தொடரட்டும்...!



  சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
  சண்டையிட்டு அத்தனையிலும்
  தோல்வி பிடிக்காத நான்
  தோற்று, நீ வெல்வதை ரசித்து !
  இதழ்கள் வலிக்கும் வரை 
  பேசிய பின்னும்
  இன்னும் மிச்சம் இருக்கிறதே
  வார்த்தைகள்.....!?
  உன்னிடம் இருந்து திரும்பி
  வர அடம் பிடிக்கும்
  குழந்தையாய் நான் !
  பிடிவாதமாய் செல்ல மறுத்து
  என்னிடமிருக்கும் நீ....!
  இவை இணையும் புள்ளியில்
  நான், நீ மறைந்து
  நாம் என்ற ஒன்றாக !?
  அதுவரை தொடரட்டும்
  இந்த அடமும் பிடிவாதமும் !!?