யார் இவள்....?!



அடிக்கடி வேஷம் கட்டுகிறேன் !!
அலங்கார அணிவகுப்பு, நான்
ஒருத்தி மட்டுமே நடை பயில
நிறக் குறைவு, மூக்கு பெரிது, 
முன் பல் தூக்கல், உயரம் அதிகம் 
நடை சரியில்லையே.......??!
நிராகரிக்க
காரணங்களுக்கா  பஞ்சம் !!


குறைகளும் நிறையாகும்  ஒரு 
புள்ளியில் - வரதட்சணை !!
துண்டின் மறைவில்  எந்த விரலை 
பிடித்தால் பேரம் படியும் 
குழப்பத்தில் அப்பா....!!?
இரவில்  புலம்புகிறாள் அம்மா
எங்களுக்கு பிறகு இவளுக்கு யார் ஆதரவு ? 
உலகம் அவ்வளவு கொடியதா ??!


அலுவலக மதியவேளையில் 
உணவுடன் என்னையும் மெல்லும்  
சக ஆண்கள், பெண்கள்....!!?
அரைநாள் விடுப்பு எடுக்க   
சந்திக்கும் ஏளன சொற்கள்....!!?
பழகி போனது அவமானம் 
விலகி போனது கூச்சம்
மறந்தே போனது வெட்கம் !?


இரவு -  மற்றவர்களை 
உறங்க வைத்து விட்டு 
என்னை மட்டும் எழுப்புகிறது....!!?
மத்தளம் கொட்ட, 
வரி சங்கம்  நின்றூத
கைத்தலம் பற்ற 
கண்ட  கனாவும்  
வருவதில்லை இன்று......!!?
   
  

தாயுமானவள்..... !!

           
     
     உன் மீதான என் காதல் 
     உவர்ப்பா, உணர்வா
     உன்மத்தக் காமமா ?
     என்னையே எரி பொருளாக்கி
     எரித்து சுகிக்கும் மேன்மையா ?
     உன்னுடன் இரண்டற 
     ஒன்றிக் கலந்திட 
     ஓம்பிச் செய்யும் தவமா...??
     விளங்கவில்லை நேற்று வரை !! 
     உன் அருகே அமர்ந்து 
     இரு கண் நோக்கி
     அலையாய் புரளும் உன் 
     தலை முடி கோதி
     உச்சியில் இதழ் பதித்த பின் 
     தெளிந்தேன்....அங்கே உன் 
     தாயின் வாசம் கண்டு !! 
     மரணபரியந்தம் 
     உன்னை மனதில் சுமக்கும் 
     நானும் 
     உன் தாயுமானவள்.....!!

   
     

காதல்....!!


          நேசிப்பை கற்று கொடுத்தாய் !
            பிரியம் புரிய வைத்தாய் !
            அன்பை என்னுள் விதைத்தாய் !
            கவிதை எழுத வைத்தாய் ! 
            நினைவெல்லாம் உலா வந்தாய் !
            கனவிலும் தொடர்ந்தாய்  !
            மிக அழகாய்.......   
            காதலின் அர்த்தம் சொன்னாய் !
            காதல் சுவை உணரவைத்தாய் !
            பின் மெல்ல 
            என் சுவாசமாய் மாறினாய் !
            காதலிக்க வைத்தும் விட்டாய் !! 
            ............
            ............
            ............
            எல்லாம் புரிய வைத்த  நீ....
            பிரிவுக்கும்  அர்த்தம் சொல்லி விடாதே !!  


வந்துவிடு.....!!?

     
     தொட்டுவிட அடம் பிடிக்கும்
     மனதை எச்சரிக்கிறேன்
     நெருப்பு வளையத்துக்குள் நீ
     அதீத பாதுகாப்பில்.......!!
     எடுத்து செல்லேன் என 
     அழைப்பு விடுத்தும்
     பேதை புன்னகை பார்த்து
     பேதலித்து போனேன்.......!!
     களவாட எண்ணம் இல்லை 
     வந்துவிடு 
     நீயாக......!!
     இல்லை தந்துவிடு 
     என் காதலை....!! 
     உன் காலடியில் 
     மண்டியிட்டு கிடக்கிறதே !!  
     இல்லை விட்டுவிடு 
     பிழைத்து  போகட்டும் 
     இவள் .....!!




மறுக்கிறாய்.....?!



   காத்திருந்தேன் உனக்காக 
   பல முறை சொல்லியும் 
   நம்ப மறுக்கிறாய்.....?!
   காத்திருந்த நேரம் 
   பல கவிதை பூத்ததை
   சொல்லியும் நம்பவில்லை ....?!
   வேறு சிந்தனை இன்றி 
   உன்னை மட்டுமே 
   மனம் சுற்றி வந்ததை 
   எப்படி புரிய வைப்பேன்....?!
   காலையில் தண்ணீர் இன்றி 
   வாசல் தெளித்ததை 
   என்னவென்று சொல்ல.....?!
   விழி மூடாமல் தவித்ததை 
   என் கண் பார்த்தும்
   நம்ப மறுக்கிறாய்...?!
   மொத்தத்தில் 
   உன்னை அறைந்தால் என்ன ??!

*******************************************************

   உன் மர்ம புன்னகையை
   வார்த்தைகளாக்கினால்
   'என் மீதான உன் காதல்
   என்னிடம் விட்டு சென்றதில்
   இதுவும் ஒன்று' என்றே 
   வருகிறது...!!

*******************************************************
  நீ சொல்லும் 
  ஒரு  வார்த்தையில் 
  என் உலகம் 
  மௌனமாகி விடும்
  ரகசியமாய் நீ அழைக்கும் 
  'என் பெயர் !!' 



ஏன் வந்தாய்....?!

மனதைப் புரட்டி போட்ட 
வார்த்தை ஜாலங்கள் - கருத்துகளால் 
முரண்பட்டும் பிடித்துப்   
போன வாதங்கள் - உயிரை 
ஆழமாய் ஊடுருவி 
சாகடித்த பேச்சுக்கள் - விளைவு 
தெரிந்தும் என்னை 
இழந்த தருணங்கள் - காதலை 
புதிதாய் எனக்கு 
சொல்லிய  சந்திப்புக்கள் - அன்பிற்கு 
புது இலக்கணம் 
எழுதிய புரிதல்கள் - உன் கர்வத்தை 
அடக்க நான் 
எடுத்த சபதங்கள் - திசை மாறி 
தாக்கி உன்முன் 
மண்டியிட்ட என் கர்வங்கள் - பல 
ஜென்மங்கள்  உனை தொடர 
மேற்கொண்ட வேண்டுதல்கள் - புரிந்தும் 
உன்னிடம் கேட்கிறேன்
            
            'ஏன் வந்தாய் என்னுள்....?!!'





போதிமரம்.....!!


சரித்திரத்தை படிக்காமல் 
சரித்திரமாகி போனார்கள்....! 
மனிதம் ஏலம் போகும் ஊரில்
மனிதனாய் வாழ துடித்த 
பேராசை....!!
மரணம் பார்த்து மரத்துப்போன
விழிகளில் வழியும் கனவையும்,
கண்ணீரையும் துடைக்க 
வலுவற்று  .....வாய் இருந்தும் 
ஊமைகளாய்......!?
குண்டு சத்தம் பழகிய 
காதுகளுக்கு 'அம்மா' என்று 
அழைக்கும் குரல் கூட 
அதிர்வாய்.....!?

முகமூடி அணிந்த உலகில்
எம் மக்கள் மட்டும் நிர்வாணமாய்....!
கண்ணீரும், கோபமுமே நிரந்தரமாகி 
அதுவும் இன்று
வர மறுக்கிறதே.......??! 
யுத்தத்தின்  மிச்சங்களாய், 
உயிரை மட்டும் தாங்கி
அகதி என்ற பெயரில் 
எந்த விதி செய்த சதி......??!
துப்பாக்கி ஏந்தியவனை மட்டும் 
யுத்தம் ப(ழி)லி வாங்குவதில்லை,
அப்பாவிகளையும்......??! 

போலி பிம்பங்கள், தனி மனித இன்ப 
துன்பங்கள், சுயநலம், அரசியல், 
சினிமா என்று சுற்றிச் சுழலும் 
உலகத்தில்...  
எங்கள் இருப்பிடம் நிரந்தர  
சாத்தியமா.....?? 
கேள்விகளிலேயே கழியும் 
இரவுகள்...... !!?

மூன்று வேளை உணவு, இருப்பிடம், குடும்பம் என்று எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு குறை என்பது போல் சலிப்பாய் வாழ்வை நகர்த்துகிறோம்  நாம்...... ஒரு முறை நமக்கு அருகில் நாடோடிகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் அகதிகளாய்  நம் ஊரின் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருக்கும்  நம் ரத்த உறவுகளுடன் சென்று பேசி அவர்களின் துயரம் தாங்கிய கண்ணீர் கதைகளை கேட்டு அறியவேண்டும்.......

"போதிமரம் வேண்டாம் அகதி முகாம் போதும் ஞானம் பெற......!!"