முன் எப்போதும்
என் மாலை பொழுதுகள்
மொட்டைமாடியில் !
நீ வந்தாய் மனதினுள்
மறந்தேன்
மாலை பொழுதின் அழகை ரசிக்க !
இன்று உன்னை விடுத்து
இருக்க எண்ணி மாடி அடைந்தேன்
மாலை நேர தென்றல்
மேனித் தொட்டு மறவாமல் நலம் விசாரிக்க
மெல்ல நிமிர்ந்து வானம் பார்த்தேன்
அடடா நிலவுக்கு ஏன் இந்த அவசரம்
கதிரவன் முழுதாய் மறையும் முன் எட்டி பார்க்கிறது !!
நிலா கவிதை எழுதி நாள் பல ஆனதை
நினைவுபடுத்த வந்தாயா ?
என் செய்வேன் உனை பார்த்தாலும்
அவன் முகம் நினைவுக்கு வருகிறது
நிச்சயம் இன்று உன்னை பற்றியதே என் கவிதை !
அட...அங்கே யாரது தென்னை மரத்தில்
ஓ... இரு குயில்கள்
எப்படி மறந்தேன் உங்களின் இனிய குரலை....
கால்களுக்கு முன் இன்னிசை
கேட்க ஓடி வருமே என் செவிகள் !
கூவுங்கள் குயில்களே
இன்று இவள் செவி உங்கள் குரல் கேட்கவே !
என்ன சலசலப்பு ?!
வேப்பமரக் கிளைகளை அசைத்து
ஏன் தூண்டிவிடுகிறாய் காற்றே !
கட்டிய ஊஞ்சலில் ஆட மறந்தேன் என்றா?!
காற்றே மெல்ல மெல்ல...
குருவிக் கூடுகள் விழுந்துவிட போகின்றன!
தென்னையில் புதிதாய் ஒரு பாளை ?
ம்...இது எப்போது ?
சந்தன நிற மலர்கள்
அழகில் கிறங்குகிறதென் மனம்!
மணம் நாசியை துளைக்கிறதே
பன்னீர் பூ உனக்கு இது வசந்த காலமா...
மரம் கொள்ளாமல் பூவாடை !
சட்டென்று சிவக்கிறது வானம் ஏனோ?
பகலெல்லாம் பூமி பந்தினை சுட்டெரித்தாய் போதும்
நிலாவுடன் பேசவேண்டும் நீ செல் !
உன்னுடன் பேசக் கூடாதாம் நிலவே
முகம் சிவந்து கோபத்துடன்
செல்கிறான் கதிரவன் !
நான் பேசுவேன் இன்று இரவு முழுவதும்
ஆம் பேசுவேன்...கவிதை எழுதுவேன்
எழுத பேனா எடுத்தேன்.......
நிலவே
இரவின் தனிமையில்
சுட்டெரிகிறாய் என்னை
வடுக்களோ உன்னில் !
.....
.....!
.....?
இரு எழுத்து
மந்திரமாம் அவனது பெயர்
உச்சரித்தே
முக்தி அடைகிறதென் காதல் !!
மரம் , குயில், ஊஞ்சல், பன்னீர் பூ
மறந்து...
அவனையே எழுதுகிறது...!
எப்போது மயக்கினான்
என் பேனாவையும் !?
11 comments:
கவிதை வரிகளில் மயங்கினேன்...
//இரு எழுத்து
மந்திரமாம் அவனது பெயர்
உச்சரித்தே
முக்தி அடைகிறதென் காதல் !! //
மிக அருமை! :-)
இரு எழுத்து
மந்திரமாம் அவனது பெயர்
உச்சரித்தே
முக்தி அடைகிறதென் காதல் !!
நிலா, வானம், காற்று, மலை,
மரம் , குயில், ஊஞ்சல், பன்னீர் பூ
மறந்து...
அவனையே எழுதுகிறது...!//
அழகு கவிதை...அழகான வரிகள்
ரசித்தேன்..
கவிதை மிக அருமை!.
மயக்கமா.....கலக்கமா பாடல் நினைவுக்கு வருகிறது.
காதல் நினைவுகளுடன் நல்ல கவிதை.
// தென்னையில் புதிதாய் ஒரு பாளை ? ம்...இது எப்போது ?//
சூழ்நிலைக்கேற்ப அசத்தலான வரிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - கவிதை அருமை அற்புதம் அசத்தல்
கவிதை சிறப்பு...வாழ்த்துக்கள்...
அருமையாக உள்ளது சகோ
வாழ்த்துக்கள்
விஜய்
கால்களுக்கு முன் இன்னிசை
கேட்க ஓடி வருமே என் செவிகள் !
செவிகளுக்கு கால்கள் வைத்த அழகுக் கவிதை!
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
கவிதை மிக அருமை.
Post a Comment