உயிருடன் இருக்கிறேன்...!






வாசலில் போடப்பட்ட நாற்காலிகளில் 

துயரம் தோய்த்த முகத்துடன் பலர் 
அதோ நடுவில் இருக்கிறாரே 
அவர்தான் இறந்தவரின் மகன் 
யோசித்துக் கொண்டே அவரின் கைத்தொட்டு விலகி 
துக்கம் விசாரிக்கும் முறையை சரியாய் செய்தேனா 
யோசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்...
நடுக்கூடத்தில் கண்ணாடிப் பெட்டி 
கிடத்தப்பட்டிருந்த உடலில் சலனமில்லை 
சுற்றி அத்தனை பேர் கதறியும் !
போடப்பட்டிருந்த மாலைகளை விட 
எனது மாலை சிறியதாக இருக்குமோ
வந்த யோசனையை ஒதுக்கி வைத்துவிட்டு
மெல்ல இறந்தவரின் முகத்தைப் பார்த்தேன்
நான்  அழுகிறேனா ஆவலோடு 
முதுகில் துளைத்த  விழிகளை எண்ணி 
எனது விழிகள் வேலையை செவ்வனே 
தொடங்கிவிட்டிருந்தது.

'அழுகை வரவில்லை என்றால் முன்பு இறந்த உனக்கு மிக நெருக்கமான யாரையாவது நினைத்துக் கொள், அழுகை தன்னால் வந்துவிடும்'  சொல்லி அனுப்பிய சகோதரியை நினைத்துக் கொண்டேன்.

அழுகை வந்தேவிட்டது

இன்று இறந்தவனுக்காக நாளை இறக்கப் போகிறவர்கள் அழுவது விதியின் விந்தை !

கண்ணீர் வருவது நின்றதும் இனியும் நிற்பது நன்றாக இருக்காது என்று சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன், என் உறவுகள் ஒரு இடத்தில் மொத்தமாக இருக்கவும் அருகில் சென்று அமர்ந்தேன்.

ஆரம்பித்தன விசாரிப்புகள்...

'எப்படி இருக்கிற, இப்ப எங்க இருக்கிற, நல்லா இருக்கே இல்ல'  எல்லா கேள்விகளும் கேட்டு முடிக்கப்பட்டன!   

அடுத்து ஏதேனும் துக்க வீடு வந்தால்
அவசியம் செல்வேன்
இன்னும் நான் இறக்கவில்லை
உயிருடன் இருக்கிறேன் என 
உறவுகளிடம் அறிவிக்க...!!





விடியல்



பிரித்தறிய இயலாத   
உன்  மௌனம்  புன்னகை
அர்த்தம்  தேடித் தேடி
தொலைத்துவிடுகிறேன்
வார்த்தைகளை
எனை சோதனைக்குள்ளாக்கி 
மகிழ்வதில் அப்படியென்ன 
ஆனந்தமோ உனக்கு...
தூக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளை
தூக்கிப் போனாயோ
இன்னும் விழிக்கவில்லை 
நானும் இரவும்...  
வாழ்க்கையை உன்னிடம் கொடுத்துவிட்டு  
வாழ்வதைக் கண்டு ரசித்திருக்க
வைத்து விட்டதென்னவோ 
வாழ வா  இல்லை நான் வாழவா ?!



நிழல் தேடி ஒதுங்கினேன்
வெட்டப்பட்ட மரத்தினடியில்
உன் மனம் தேடி
ஒதுங்கியது என் காதல்


* * *

விடியல் நீயென
நானிருக்க
அஸ்தமனம் இல்லா
என் உலகில் விடியல் ஏதடி
என்கிறாய்


* * *


image -google

யாருக்கானது ...!



                                                    'ம்' என்று நீ சொல்லும்                                               
                                                    ஒவ்வொரு முறையும்
                                                    ஓராயிரம் வார்த்தை சொன்னதாய்
                                                    திருப்திபட்டுக் கொள்ளச் சொல்கிறது
                                                    'ம்' உடன் தொடர்ந்து வந்த
                                                    உன் புன்னகை...!

                                                    * * *

                                                    சொல்ல வந்ததை மறைத்து
                                                    வேறு எதையோ
                                                    பேசி விடைபெறும்போது
                                                    விழுந்து நொறுங்குகிறது  
                                                    மனதைவிட்டு வெளியேறிவிட்ட
                                                    ஒலியற்ற சொற்கள் !

                                                    * * *

                                                    என்னவன்
                                                    தூங்கவேண்டும்
                                                    தொல்லைப் பண்ணாமல்
                                                    தொலைந்து போங்கள்
                                                    துரத்தி விட்டேன்
                                                    உன் மீதான என் நினைவுகளை...

                                                    * * *

                                                    வழக்கம்போல காசோலையில்
                                                    இன்று கையெழுத்திட்டேன்
                                                    ஏதோ வித்தியாசம் 
                                                    உற்றுக் கவனித்தேன்
                                                    எப்போது இணைந்தது
                                                    என் பெயருடன் உனது பெயர் !

                                                    * * *


                                                   அடுத்தவர் கவிதை வாசிக்கும் போது
                                                   உன் நினைவு வரும்
                                                   உன் கவிதை வாசிக்கும் போது
                                                   என் நினைவு போகும்
                                                   கவிதை யாருக்கானது என...!

                                                    * * *

                                                    எனக்கு உன் மௌனம் பிடிப்பதில்லை  
                                                    உனக்கு என் சத்தம் பிடிக்காது
                                                    இருவரும் இணையும் பொழுதில்
                                                    இரண்டு மௌனங்கள்                                                                                                                        பேசிக்கொண்டிருக்கின்றன
                                                    சத்தமாக !

                                                    * * *                                                    

                                                     





image -Google

ஈர்ப்பு விதி ...!




அன்னையிடம் இருந்து
தொடங்கியது என் உலகம்
சுழலத் தொடங்கியது
உன்னை சந்தித்தப்பிறகு !

வண்ணத்துப்பூச்சி எனக்கு தெரியும்
வண்ணங்கள் இருக்கிறது பார் என்றாய்
கம்பன் பாரதி உன் உறவென
அறிமுகப்படுத்தினாய்

அடைந்துக்கிடக்காதே
சிறகடித்துப் பற...
வானம் உன் வசமாகும்
என்றாய்

சிறகில்லை என்றேன் 
சிரித்துக் கொண்டே
அணிவித்து விட்டாய்
அதுவரை நான் அறியாச் சிறகை
என்னுள் இருந்து எடுத்து !?

படித்ததெல்லாம் மறந்தது என்றேன்
புதிதாய் படி கற்றுத் தருகிறேன் என்றாய்
உன்னையும் படிக்க வைத்தாய்
விரும்பிப் படித்தேன் !

பூட்டிய சிறகுடன் பறக்க
எத்தனித்தப் போது
எங்கோ கிளம்பிவிட்டாய் நீ...
காரணம் கேட்டேன்
'உன் நினைவுகள் 
என் நினைவுகள் அல்ல' 
காற்றின் வழி செவியை அறைகிறது
எனக்கான பதில் !!? 



* * * * *

image - Google