Posted by
Kousalya Raj
comments (0)
                                  
பல இரவுகள்
உறங்காமல் விழித்திருக்கிறேன்
விடிவதற்குள் கண்ணீரால்
கரைந்து போய் விடும்
துயரங்கள் என்று
கை நோக நோக
அழுத்தித் தேய்க்கிறேன்
என்மேல் படிந்திருக்கும்
முன் ஜென்மக் கரைகளை
கானல் நீரால்
கழுவித் தீர்க்கிறேன்
பிறருக்கு நான் இழைத்த
நிகழ்காலத் தவறுகளை
அழிக்க முயன்றும் பிடிவாதமாய்
உட்கார்ந்துக்கொண்டு வதைக்கின்றன
எனக்கு நான் செய்த துரோகங்கள்
அர்த்தமற்ற வாழ்க்கையில்
தேவனை தேடுவது மட்டும்
ஏனோ இன்னும் நிற்கவில்லை
இப்போதெல்லாம்
சாம்பல் பறந்து வந்து ஒட்டிக் கொள்கிறது
சுடுகாட்டை கடக்கையில்...
கண்களை இறுக மூடிக்கொள்கிறேன்
சுற்றிலும் நடைப்பிண மனிதர்கள்...
தலையில் சூடிக்கொண்ட மலரிலும்
ரத்த வாடை...
கல்லறைத் தோட்டத்தில்
உலாவுகிறேன் கனவுகளிலும்...
பிய்த்தெறிய முடியவில்லை
பிடிவாதமாய் ஒட்டிகொண்டுவிட்ட
சாவின் நிழலை...
அதனால்தான் என்னவோ
சாவு வீட்டிற்குச் சென்றவள்
சிரித்துவிட்டு வருகிறேன்...!!!
Labels:
கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (0)
                                  
நட்சத்திரங்களை பரப்பி
வானவில்லை நட்டு வைத்து
நிலவுடன் கைக்கோர்ப்பது
உனது கனவாக உள்ளது
கனவு நிறைவேறவேண்டும்
என்பது ஒன்றே
எனது பிரார்த்தனையானது
இப்போது !
* * *
தீரத் தீர
மீண்டும் மீண்டும்
ஊற்றி நிறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என்னை...
நினைத்து நினைத்து
தீர்ந்துப் போகுமோ
உன் ஞாபகங்கள் !!?
* * *
நெஞ்சை பிசையும் கவலை
வருத்தும் வேதனை
எவை
என்னை மூழ்கடித்தாலும்
நொடியில்
கரையேறி விடுவேன்
என் பெயர் சொல்லி
நீ அழைக்கும் போதினிலே...
* * *
புகைப்படம் எடுத்தப்போது
யாரை பார்த்தனவோ
இப்போது
என்னைத் தவிர
வேறு எங்கும் பார்ப்பதில்லை
உனது அந்த இரு விழிகள் !!
Labels:
காதல்
,
காதல்  கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (7)
                                  
வேண்டாம் என்று
புறந்தள்ளும் போதெல்லாம்
வலுகட்டாயமாகத் திணித்து
விடுகிறார்கள் எதையாவது
தெரியாது என
ஒப்புக் கொண்டாலும்
பிடிவாதமாய் சொல்லித்
தருகிறார்கள் தெரிந்ததையே
பிடிக்கவில்லை என
நகர்ந்தாலும் பிடித்துத்தான்
ஆகவேண்டும்
வலிந்து பிரியத்தைக் கொட்டுகிறார்கள்
முடியாது என
மறுத்தாலும் ஏன் முடியாது
முடியும் என்று சொல்
உபதேசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்
நான் முடிக்க நினைக்கையில்
சரியாக எவரோ ஆரம்பித்துவிட
எனதியல்புகள்
என்பதெல்லாம் இல்லாததாகி
தொலைவதா
தொலைப்பதா யோசித்துத்
தொலைப்பதற்குள்
'வா போகலாம்' கைப் பற்றி
யாரோ இழுக்க
இதோ கிளம்பிவிட்டேன்
முற்றிலுமாக
என்னைத் தவிர்த்துவிட்டு...
Labels:
அனுபவம்
,
கவிதை மாதிரி
Posted by
Kousalya Raj
comments (6)
                                  
பிரியங்களை கோர்த்து
ஒரு வாழ்த்துச்சொல்ல
வார்த்தைகளை தேடித்தேடி
களைத்துப் போனேன் நான்
ஏதோ கையில் கிடைத்த எழுத்துக்களை
இதோ வரிகளாக்குகிறேன்
பிழை இருப்பினும்
ஏற்றுக் கொள்
அவை பிழைகள் அல்ல
என் பிரியங்கள் என...
வார்த்தைகளுக்குள்
நீ அடங்குவதும்
அதற்குள் உன்னை
அடக்குவதும்
அவ்வளவு எளிதா என்ன...
யாரோடும் ஒப்பிட நீ
அவர் போல்
இவர் போல் அல்ல
நீ வேறானவன்
என் நல்லவை அனைத்திற்கும்
வேரானவன்...
நீ நேரானவன்
முழுமைக்குள் மூழ்கிக் கிடக்கும்
நிறைவானவன்...
பேசுபவன் அல்ல நீ
பேசப்பட வேண்டியவன் !
அசாத்தியமும்
சாத்தியம் உன்னிடத்தில்...
அசாதாரணங்கள்
சாதாரணமாவது உன்னிடமே...
உலகின்
அத்தனை வாழ்த்துகளும்
ஒட்டு மொத்தமாய்
ஒன்றுச் சேர்ந்து
வாழ்த்தட்டும் இன்று !!!
போராளி பேரொளியாய்
மின்னட்டும் என்றும்...!!!!
இனிய நண்பர் தேவாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் !!
(குருவை ஒருமையில் குறிப்பிட்டதற்கு பொறுத்துக் கொள்க)  :-)
Posted by
Kousalya Raj
comments (2)
                                  
அனல் வீசும் காட்டில்
எரிந்தும் எரியாமலும்
கசியும் புகை
காற்றில் வீசி
எறியப் பட்ட சருகுகள்
காட்டாற்றில்
பெருக்கெடுத்தோடுகிறது மணல்
கீச்சு கீச்சுக்களும்
குக்கூக்களும் கரைந்து
செவியருக்கிறது கோட்டான்களின்
ஊளைச் சத்தம்...
மாட்டிக்கொண்ட
விட்டு விலகிட முடியா
ஆலமர விழுதின் வேர் முடிச்சை
அவிழ்க்கவும் வெட்டவும் இயலும்
என்றபோதிலும்
இப்போதெனக்கு
வேண்டுமெனக்கு ஒரு தனிமை
என்னில் இருந்து
என்னைத் தவிர்த்த ஒரு தனிமை !
Posted by
Kousalya Raj
comments (4)
                                  
பேச விசயம்
இல்லாத போதும்
அடிக்கடி
பேசியாகணும்
உன்னிடம்
ஏதோ ஒன்றை பற்றியாவது
இதை
அதை
எதையாவது
தேடி ஓடுகிறேன்
அந்த ஏதோ ஒன்றை
கண்டுப் பிடிக்க...!
* * *
நான் தூங்க
முதலில் உன் நினைவுகளை
தூங்க வைக்கிறேன்...
மூடிய இமைகளுக்குள்
ஓடிப் பிடித்து விளையாடுகிறது
அதுவரை தூங்குவதாய்
நடித்துக் கொண்டிருந்த
உன் நினைவுகள்..!
* * *
ஊடலில் உண்டாம் இன்பம்
சண்டைக்கு காரணம் தேடி
உன் வார்த்தைகளுக்குள் ஓடி
தேடிக் கண்டுபிடித்து
உன் நெஞ்சுக்கு நேராய்
வீசிய அடுத்த நொடி
ஐயோ உனக்கு வலிக்குமே
பதறும் என்னை பைத்தியகாரியாக்கி
நீ சிரிக்கும் வேளையில்
சமாதானப்பூ பூத்து
கூடலில் முடித்து வைக்கிறது
* * *
சூழ்ந்த மேகங்களை
வேகவேகமாய் விலக்கி
மெல்ல எட்டிப்பார்க்கிறான்
கதிரவன்...
எனக்கேன்
உன் முகம் நினைவுக்கு வரணும் ?!
* * *
பேருந்தில்
கூட்டத்தோடு
முண்டியடித்து
எனக்கு முன்னால்
ஏறிச் சென்று
துண்டுப் போட்டு
ஜன்னலோரம்
இடம் பிடித்து வைக்கிறது
உன் நினைவுகள் !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (1)
உனக்கு பிடித்த
உன் கற்பனைகளுக்குச் சிறகு தந்த
வாதாம் மரத்தின் அருகே
உன் சுவாசத்தின் ஒருத் துளி தேடி
அமர்ந்திருக்கின்றேன்
வெகு நேரமாய் ...
ஒன்றாய் நாம் திரிந்த வீதிகளில்
உன் நினைவுகளை ஏந்தி
தனியாய் அலையும் எனக்கு
ஒரு நம்பிக்கை இருக்கிறது
என்னை அழைத்து வந்த
அந்த ஏதோ ஒன்று
உன்னையும் இங்கே
அழைத்து வரும் என்று...
நீண்ட காத்திருப்புகள்
பதிலொன்றை என் மீது
வீசி எறிந்தது கேள்வியாக...
கடைசியாக நீ பேசிய
'புரிய முயற்சிச் செய்'
என்பதன் அர்த்தம்
'பிரிய முயற்சிச் செய்'
என்பதாக இருக்குமோ...?
ஒரு அத்தியாயம் ஒன்றின்
முடிவுரை எழுதி முடித்து
முடிந்து
பனிப் போர்வைக்குள்
தனித்து
நான் விறைத்துக் கிடக்கும்
வேளையில்
நீ என்னைக் கடந்து போகலாம்
அது நானென்று அறியாமல்
இது ஏதோவொன்று என...!
படம்- கூகுள்
Labels:
காதல்
,
காதல்  கவிதைகள்








