Posted by
Kousalya Raj
comments (3)
என்ன என்னமோ எண்ணங்கள்
எண்ணங்கள் எண்ணி எண்ணி
எண்ணங்களின் எண்ணிக்கை
ஏராளம்...
ஏதோ எண்ணுகிறேன்
ஏதோ பேசுகிறேன்
எதையோ செய்கிறேன்
என் எண்ணம் போல்
எதையும்
எடுக்கவும் இயலவில்லை...
எதையும்
கொடுக்கவும் மனதில்லை !
பயணத்தில் பல நிறுத்தங்கள்
ஒவ்வொன்றாய் கடக்கின்றேன்
உடன் வந்த பலரும்
நிறுத்தத்திற்கு ஒருவராய்
இறங்கி செல்ல
என் நிறுத்தம் வருவது எப்போது
தெரியாமல் தொடருகிறேன்
பயணத்தை...
எனக்கான நிறுத்தம்
எதுவென சொல்லக்கூடியவர்
என ஒருவரை கை காட்டினார்கள்
எனது எதுவென
கேட்க எத்தனிக்கும் தருணம்
மிக சரியாக
அவரின் நிறுத்தமும் வந்துவிட
இறங்கிச் சென்றே விட்டார்...!
படம்- கூகுள்
Posted by
Kousalya Raj
comments (1)
ஓட ஓடி ஒளிகிறாய்
என்னை என்னுள் ஒளிக்கிறாய்
தேடத் தேட தொலைகிறாய்
என்னையும் தொலைக்கிறாய்
எங்கேயென கெஞ்சினால்
வானத்தில் உனது குரல்
அண்ணாந்து பார்க்கையில்
மேகத்தினுள் மறைகிறாய்
பகலில்
கதிரவனை போலாகிறாய்
இரவினில்
நிலவே நான்தான் என்பாயோ...!
கண்ட கனவொன்று
கலைந்தப் போது
எனதருகில் சிறகொன்றை
கண்டெடுத்தேன் நேற்றிரவு...!
இதோ என் நேச இரைகளை
வானெங்கும் தூவுகிறேன்
பறவையென பறந்து திரியும் நீ
கொத்தித் தின்றுவிடு
இன்றேனும் ...!
Labels:
கவிதை காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (1)
உன் ஒருவனை தேடி
ஜென்மஜென்மமாய் அலைந்து திரிந்த
கதைகளை நான் சொல்ல
நீ கேட்க வேண்டுமென
நாட்களை வருடங்களில் கடந்து
காத்துக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
பேசாமல் தீர்ந்த பொழுதுகளை
தேடிப்பிடித்து
பேசிப் பேசித் தீர்க்கவும்
வாழாமல் வெட்டியாய் கழிந்த இரவுகளை
வாழ்ந்துக் கழிப்பது எவ்வாறெனவும்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
தனிமை துயரினை தீர்க்க
கனவினைப் போன்ற மருந்தொன்றை
உனையன்றி வேறு யார் தருவார்?
எனது கனவுகளை
நனவாக்கிய உனது கனவுகளை
கையில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
நெருக்கத்தின் நெருப்பில் நெஞ்சம் தகிக்க
விழிகளின் மோதலில் மோகித்து
விரல்களின் உரசலில் கிறங்கிக் கிடந்த
கற்பனைகளை சாத்தியமாக்கி
நமது முதல் சந்திப்பினை காவியமாக்க
முயன்றுக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
...
...
...
அன்றேனும் செய்வாயா... காதல்!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (0)
பல இரவுகள்
உறங்காமல் விழித்திருக்கிறேன்
விடிவதற்குள் கண்ணீரால்
கரைந்து போய் விடும்
துயரங்கள் என்று
கை நோக நோக
அழுத்தித் தேய்க்கிறேன்
என்மேல் படிந்திருக்கும்
முன் ஜென்மக் கரைகளை
கானல் நீரால்
கழுவித் தீர்க்கிறேன்
பிறருக்கு நான் இழைத்த
நிகழ்காலத் தவறுகளை
அழிக்க முயன்றும் பிடிவாதமாய்
உட்கார்ந்துக்கொண்டு வதைக்கின்றன
எனக்கு நான் செய்த துரோகங்கள்
அர்த்தமற்ற வாழ்க்கையில்
தேவனை தேடுவது மட்டும்
ஏனோ இன்னும் நிற்கவில்லை
இப்போதெல்லாம்
சாம்பல் பறந்து வந்து ஒட்டிக் கொள்கிறது
சுடுகாட்டை கடக்கையில்...
கண்களை இறுக மூடிக்கொள்கிறேன்
சுற்றிலும் நடைப்பிண மனிதர்கள்...
தலையில் சூடிக்கொண்ட மலரிலும்
ரத்த வாடை...
கல்லறைத் தோட்டத்தில்
உலாவுகிறேன் கனவுகளிலும்...
பிய்த்தெறிய முடியவில்லை
பிடிவாதமாய் ஒட்டிகொண்டுவிட்ட
சாவின் நிழலை...
அதனால்தான் என்னவோ
சாவு வீட்டிற்குச் சென்றவள்
சிரித்துவிட்டு வருகிறேன்...!!!
Labels:
கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (0)
நட்சத்திரங்களை பரப்பி
வானவில்லை நட்டு வைத்து
நிலவுடன் கைக்கோர்ப்பது
உனது கனவாக உள்ளது
கனவு நிறைவேறவேண்டும்
என்பது ஒன்றே
எனது பிரார்த்தனையானது
இப்போது !
* * *
தீரத் தீர
மீண்டும் மீண்டும்
ஊற்றி நிறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என்னை...
நினைத்து நினைத்து
தீர்ந்துப் போகுமோ
உன் ஞாபகங்கள் !!?
* * *
நெஞ்சை பிசையும் கவலை
வருத்தும் வேதனை
எவை
என்னை மூழ்கடித்தாலும்
நொடியில்
கரையேறி விடுவேன்
என் பெயர் சொல்லி
நீ அழைக்கும் போதினிலே...
* * *
புகைப்படம் எடுத்தப்போது
யாரை பார்த்தனவோ
இப்போது
என்னைத் தவிர
வேறு எங்கும் பார்ப்பதில்லை
உனது அந்த இரு விழிகள் !!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (7)
வேண்டாம் என்று
புறந்தள்ளும் போதெல்லாம்
வலுகட்டாயமாகத் திணித்து
விடுகிறார்கள் எதையாவது
தெரியாது என
ஒப்புக் கொண்டாலும்
பிடிவாதமாய் சொல்லித்
தருகிறார்கள் தெரிந்ததையே
பிடிக்கவில்லை என
நகர்ந்தாலும் பிடித்துத்தான்
ஆகவேண்டும்
வலிந்து பிரியத்தைக் கொட்டுகிறார்கள்
முடியாது என
மறுத்தாலும் ஏன் முடியாது
முடியும் என்று சொல்
உபதேசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்
நான் முடிக்க நினைக்கையில்
சரியாக எவரோ ஆரம்பித்துவிட
எனதியல்புகள்
என்பதெல்லாம் இல்லாததாகி
தொலைவதா
தொலைப்பதா யோசித்துத்
தொலைப்பதற்குள்
'வா போகலாம்' கைப் பற்றி
யாரோ இழுக்க
இதோ கிளம்பிவிட்டேன்
முற்றிலுமாக
என்னைத் தவிர்த்துவிட்டு...
Labels:
அனுபவம்
,
கவிதை மாதிரி



.jpg)




